யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த ஈனச்செயலை இராணுவத்தினர் செய்யவில்லை.
அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசற் கதவுகளைப் பூட்டி விளக்குகளை அணைத்துவிட்டு திருட்டுத்தனமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே செய்து முடித்திருக்கிறது.
இதற்கு, சட்டவிரோத தூபி என்பதால் அழுத்தங்கள் காரணமாகவே அகற்ற வேண்டி ஏற்பட்டது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா விளக்கம் வழங்கியுள்ளார்.
துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றிரவு பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது தொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை நிகழ்த்திய ராஜபக்ச சகோதரர்கள் அதற்கான சாட்சியங்களையும், தடயங்களையும் அழித்தொழிப்பதில் முழுவீச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாகவே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அவர்தம் உறவினர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியைத் தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரைக் கொண்டே இடித்தழிப்பித்துள்ளனர்.
நினைவுத்தூபிகள் பெறுமனே சீமேந்தாலும் கற்களாலும் ஆன உயிரற்ற தூண்கள் அல்ல. கருங்கல்லாக இருக்கும் வரைக்கும் காலடியில் மிதிபடும் பாறையாகக் கருதப்படுகின்ற கருங்கல் தெய்வச்சிலையாக வடிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு புனிதம் பெற்று வணக்கத்துக்குரியதாக மாறுகின்றதோ அதேபோன்றுதான் நினைவுக்கற்களும் நினைவுத்தூபிகளும்.
இவற்றில் மரணித்துப் போனவர்களின் ஆன்மா குடிகொண்டிருப்பதாகவே அவற்றை அஞ்சலிப்பவர்கள் நம்புகிறார்கள். தமிழத் தேசியக் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வரலாற்றுப் பங்களிப்பை நல்கிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் இழிசெயலால் தன் மீது கழுவ முடியாத கரியைப் பூசிக் கொண்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள், அரசின் சேவகர்களாக இருக்கும் அதேசமயம் அவர்கள் சார்ந்த இனத்தின் நலன்களையும் அபிலாசைகளையும் கருத்தில் கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அ. துரைராஜா அவர்கள் ஒரு துணைவேந்தராக பல்கலைக்கழகத்தை நல்வழி நடத்திச் சென்ற அதேவேளை, தமிழ் இனத்தின் அரசியல் விடுதலை குறித்த தெளிவான பார்வையுடனும் செயற்பட்டிருந்தார்.
அதனாலேயே அவர் மாமனிதராகப் போற்றப்படுகின்றார். இப்போதுள்ளவர்கள் மாமனிதர்களாக வேண்டாம்; குறைந்தபட்சம் மனிதர்களாக கூட நடந்திருந்தால் மரணித்தவர்களின் நினைவுகளைச் சுமந்துள்ள தூபியை இடிப்பதற்கான உத்தரவைச் சிரமேற்கொணடு நிறைவேற்றியிருக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.