நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மாதிரிகள் பெறப்பட்டு பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதன் பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றில் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் சுயதனிமைப்படுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.