இலங்கைத் தமிழரின் நிலைமை தொடர்பில் பிரான்ஸின் உதவியை கோரி 11 எம்பிக்கள் மக்ரோனுக்கு அவசர கடிதம்

இலங்கையில் நீடித்த அமைதிக்கும் தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும்.

இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர்.

பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் ஒப்பம் இட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழ் சமூகம் தற்போது எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழ்நிலை மீது கவனத்தைக் குவிக்கும் நோக்குடன் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் –

போருக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் உண்மையான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் வஞ்சகத்தனமான வேறு வடிவங்களில் முன்னெடுக்கப் படுகின்றன. 2015 ஐ. நா. தீர்மானத்தில் கூறப்பட்டவாறு ஒர் இடைக்கால நீதிச் செயல்முறையை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தவறி விட்டது. போர் குற்றவாளிகளைத் தண்டிப்பது உட்பட பாதிக்கப்பட்ட தமிழர்களது நிலங்களை மீளளிப்பது, இழப்பீடுகளை வழங்குவது போன்றவற்றை உள்ளடக்கிய பொறிமுறையை இலங்கை நிறைவேற்றவில்லை.

தமிழர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், கருத்துக்கள் அங்கு மேலெழுகின்றன. தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு தமிழர்களுக்கு எதிராக அரசியல் நிர்வாகம் கையாளப்பட்டு வருகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் மீது சித்திரவதைகளும் கண்காணிப் புக்களும் தொடர்கின்றன. மறுபுறத்தில் சிங்கள படைகளைச் சேர்ந்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படுகிறது.

உள்நாட்டுப் போரில் யுத்தக் குற்றங்கள், மனிதத்தன்மைக்கு எதிரான மீறல்களைப் புரிந்தவர் என்று பகிரங்கமாக அறியப்பட்ட சவீந்திர சில்வா நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் உண்மையான – நீடித்த – பகிர்ந்து கொள்ளப்பட்ட – அமைதியின் வெற்றிக்கு பிரான்ஸ் தனக்கிருக்கும் அனைத்து செல்வாக்குகளையும் பயன்படுத்தி அவசரமாக உதவ வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர்களது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.