கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் அனுமதி ஆளுநரிடம் கையளிப்பு

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் எழுத்து மூலமான அனுமதியினை வட மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சலர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் நேற்று (05) கையளித்துள்ளார்.

யாழ் பல்கலைழக கிளிநொச்சி விவசாய பீடத்தின் ஆய்வு பயிற்சி கட்டடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் வட மாகாண ஆளுநரிடம் இதற்கான அனுமதி கடிதத்தையும் கையளித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கல்வி வலயம் என இதுவரை காலமும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை என நான்கு கோட்டக் கல்வி பிரிவுகளாக 104 பாடசாலைகளுடன் 32,028 மாணவர்கள் 2,035 ஆசிரியர்கள் 28 உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள், என இயங்கி வருகிறது.

எனவே கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான மு ன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சின் அனுமதியும் கிடைத்துள்ளது.

இனி குறித்த அனுமதியுடன் அமைச்சரவைக்கு விடயம் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் அனுமதி பெறப்பட்ட பின்னர் வலயப் பிரிப்புக்கான பணிகள் உத்தியோகப் பூர்வமாக முன்னெடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி கல்வி வலயம் தெரிவித்துள்ளது.

அத்தோடு கரைச்சி பூநகரி ஒரு வலயமாகவும், பளை, கண்டாவளை ஒரு வலயமாகவும் இரண்டு வலயங்கள் பிரிக்கப்படவுள்ளன.