புத்தரின் பெயரால் தொடரும் ஆக்கிரமிப்பு அரசியல்

குடும்பத்தையும் ஆட்சி உரிமையையும் துறந்து, மெய்ஞான வாழ்வைத் தேடிய சித்தார்த்தன், ஒருநாள் ‘புத்தர்’ ஆனார். “ஆசையே துன்பத்தின் அடிப்படை” என்று, இந்த உலகத்துக்குப் போதித்த புத்தரின் பெயரால், ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும் முன்னெடுக்கப்படுவது என்பது, புத்தனின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது.

அரச மரத்தடியில் ஞானம் பெற்ற போதுதான், சித்தார்த்தன் ‘புத்தர்’ ஆனார். ஆனால், அதுவே இன்றைக்கு அவருக்கு வினையாக மாறி நிற்கின்றது. வடக்கு, கிழக்கில் அரச மரத்தைத் தேடி இராணுவமும் அரச நிறுவனங்களும் அலைகின்றன. அதுவும் மாற்று மத ஸ்தலங்கள், பிரதான வீதிகள், சந்திகள் என்றால், அங்கு புத்தர் சிலை முளைத்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு, நிலைமை சென்றுவிட்டது.

கிட்டத்தட்ட வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து அரச மரங்களுக்குக் கீழும் புத்தரின் சிலைகளைக் காண முடியும். இனி, அரச மரங்களைத் தேட முடியாது என்கிற கட்டத்தில், தென் இலங்கை ஆட்சியாளர்கள் மாற்று வழிகளைக் கையாளத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்குத் தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், காணி அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களை முன்னிறுத்துகிறார்கள்.

தென் இலங்கையில் யார், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரல் மாறுவதில்லை. அரச இயந்திரம் தன்னுடைய இயக்கத்தை நிறுத்துவதேயில்லை. அவை, தமிழர் பாரம்பரிய அடையாளங்களை அழிப்பது தொடங்கி, அபகரிப்பது வரையில் நிகழ்த்திக் கொண்டேயிருக்கும். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த 12 ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் காணி அமைச்சும் இணைந்து, பலநூறு தமிழர் பாரம்பரிய வழித்தடங்களையும் வழிபாட்டு இடங்களையும் ஆக்கிரமித்து விட்டன.

பாரம்பரிய வழிபாட்டு முறை என்பது, மனிதனின் வாழ்வோடு வருவது. அது, சில ஆண்டுகளுக்குள் சுருங்கும் வரலாற்றைக் கொண்டிருப்பதில்லை. பலநூறு ஆண்டுகளுக்கான வரலாற்றைக் கொண்டது. ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கூடாகக் கடத்தப்பட்டு பேணப்படுவது. ஆதிலிங்க, ஆதிசிவன் வழிபாட்டு முறை என்பதும் தமிழர் வாழ்வில், குறிப்பாக காடுகளோடும் மலைகளோடும் வாழ்ந்த வன்னி மக்களின் வழிபாட்டு முறையாகும்.

பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கின்ற வழிபாட்டு முறைக்கு எதிராக, அதன் ஆன்மாவை உணராமால், 50 வருடங்களுக்குள் முளைத்த ஓர் அரச நிறுவனமொன்று அதிகாரத்தைச் செலுத்துவது என்பது, ஆக்கிரமிப்பின் வெளிப்பாடுதான்.

வன்னியில் தற்போது தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியிருக்கும் வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர், குருந்தூர் மலை ஆதிசிவன்  வழிபாட்டிடங்கள் அவற்றுக்கான அண்மைய சான்றுகளாகும்.

பெரிய கோவில்களை அல்லது, நூற்றாண்டுகளுக்குக் குறைவான வரலாற்றைக் கொண்டிருக்கின்ற சைவக் கோவில்களுக்கு முறையான பதிவுகள் இருக்கின்றன. இந்தக் கோவில்களின் காணிகள், தனிநபர்களிடமோ ஓர் அமைப்பிடமோ இருக்கும். அவற்றை ஆக்கிரமிப்பது என்பது, சட்டரீதியான இடர்பாடுகளை ஏற்படுத்தும்.

அப்படியான நிலையில், பாரம்பரிய வழித்தடங்களில், வழிபாட்டிடங்களில் கை வைப்பது என்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலகுவானது. ஏனெனில், அந்த இடங்கள் பெரும்பாலும் பொதுவான நிலப்பகுதியாக, மலையாகக் காடாக இருக்கும். அதன் சட்ட அங்கிகாரத்தை மறுதலிப்பது இலகுவாகும்.

‘காடு அழிக்கப்படுகின்றது, தொல்பொருள் இடங்களில் அத்துமீறல்கள் இடம்பெருகின்றன’ என்கிற பெயரில், நில ஆக்கிரமிப்புக்காக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கின்ற சட்டங்களின் வழியாக, தமிழரின் பாரம்பரிய வழிபாட்டிடங்களில் கை வைக்கப்படுகின்றது.

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரருக்கான பொங்கல் விழாக்களுக்கான தடை விதிக்கப்படுவது தொடங்கி, குருந்தூர்மலை ஆதிசிவனின் சூலம் அகற்றப்பட்டது வரையில், தென் இலங்கையின் ஆக்கிரமிப்பின் வேர்கள்தான் படர்ந்திருக்கின்றன. இந்த வேர்களுக்கு வெந்நீர் ஊற்றுவதற்குப் பதிலாக, சிவசேனை போன்ற சோரம் போன தரப்புகள், நன்னீர் உற்றி வளர்க்க முனைகின்றன.

கடந்த வாரம் குருந்தூர்மலை ஆதிசிவனின் சூலம் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு, அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடங்கி பலரும் நேரடியாக ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தினர். ஆனால், சிவசேனை அமைப்பு,  ஊடகங்களில் வந்து, சூலம் அகற்றப்படவில்லை என்று, தென் இலங்கை நிகழ்ச்சி நிரலுக்கு வெள்ளை அடித்தது. மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில், இவ்வாறான அசிங்கமான காரியங்களை நிகழ்த்துவது என்பது இழிசெயலாகும். தமிழ் மக்கள் இவ்வாறானவர்களை, அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இன்னொரு பக்கம், கடந்த வாரம் புத்தூர்,  நவகிரியில் நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற தொல்பொருள் திணைக்களத்தினர், கிடங்குகளைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டவர்களின் தலையீடுகளால், அங்கு கிடங்கு வெட்டிக் கொண்டிருந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தொல்பொருள் திணைக்களமொன்று, அகழ்வாராச்சிகளைச் செய்வதற்கான முறை உண்டு.அகழ்வுப் பணிகளின் போது, தொல்பொருள் சின்னங்கள் சிதையாமல் பேணும் அளவுக்கான கரிசனையோடு முன்னெடுப்பட வேண்டியது.

ஆனால், அகழ்வாராச்சி என்கிற பெயரில் கிடங்குகளை தோண்டுதல் என்பது, பேரச்சம் விளைவிக்கக் கூடியது. அது, யாரும் பார்க்காத நேரத்தில் கிடங்குகளை அவசர அவசரமாகத் தோண்டி அதற்கு ஏதாவது ஒன்றைப் போட்டுவிட்டு, இன்னொரு நாளில் அதனையே, பாரம்பரியச் சின்னமாக தோண்டியெடுக்கும் சதி முயற்சிகளின் போக்கிலானது.

நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் தோண்டப்பட்ட கிடங்குகளைக் காணும் போது, அந்த அச்சம்தான் எழுகின்றது.

ஒரு நாட்டின் பாரம்பரிய அடையாளங்கள், தொல்பொருள் சின்னங்கள் பேணப்பட வேண்டும். ஆனால், அவை, எந்தவித மத, மார்க்க, இன அடையாள முன்முடிவுகளும் இல்லாமல் முன்னெடுக்கப்படப் வேண்டும். அப்போதுதான், ஒரு நாட்டின் உண்மையான வரலாறு வெளிப்படும். அதைவிடுத்து, புத்தர் சிலைகள் இருக்கின்ற இடங்கள் அனைத்தும் சிங்கள பௌத்தர்களுக்கானது என்ற வரலாற்றை வலிந்து எழுத முனையும்போதுதான் சிக்கல் உருவாகின்றது. அவ்வாறானதொரு நிலையையே, தொல்பொருள் திணைக்களமும் வனவளத் திணைக்களமும், காணி அமைச்சும் இணைந்து, வடக்கு, கிழக்கின் முன்னெடுக்க முயல்கின்றன.

நாட்டின் முக்கிய பகுதிகள் எல்லாமும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. கொழும்புத் துறைமுக முனையங்கள், திருகோணமலை துறைமுகம், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பு நகரின் முக்கிய பகுதிகள், யாழ்ப்பாணத்தின் தீவுகள், மன்னாரின் தீவுகள் என்று தொடங்கி சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டு, இலங்கையின் வருமானமீட்டுப் பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன.

இந்த ஆக்கிரமிப்புக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள், எந்தவித எதிர்கால நோக்கும் இன்றி, தங்களதும், தங்களது குடும்பங்களினதும் பைகளை நிறைக்கும் நோக்கில் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான தகிடு தித்தங்களை மறைப்பதற்காகவும் தென் இலங்கை மக்களை இன, மத ரீதியாகக் கொதிநிலையில் வைத்துக் கொள்ளவும் கூட வடக்கு, கிழக்கின் தொல்பொருள் அகழ்வு, விகாரை அமைப்பு என்கிற பெயரில் நாடகமாடுகிறார்கள். இவர்களிடத்தில் புத்தரின் பெருமைகளைப் பேணும் எண்ணங்கள் ஏதும் இல்லை. அவரின் போதனைகளுக்கு எதிரான எண்ணங்கள் மாத்திரமே, முதன்மை பெற்றிருக்கின்றன.

பேராசையும் ஆட்சியதிகார மோகமும் இலங்கையின் அனைத்துச் சமூகங்களையும் குட்டிச்சுவராக்கி, சிதைத்துக் கொண்டிருக்கின்றன. புத்தரின் பெயராலேயே  அவை யாவும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம், எங்காவது இருந்து புத்தர் பார்த்துக் கொண்டிருந்தால், மனம் வெதும்பி வெதும்பி, வெறுப்பின் உச்சத்துக்கே சென்றிருப்பார்.