விமான இயந்திர பொறியில் தீ பிடித்த சம்பவத்தையடுத்து போயிங் 777 விமானங்களை ஆய்வு செய்ய வேண்டும் என யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்ஏஏ) உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதற்காக ஒரு தனியான விசாரணைக் குழுவை உருவாக்கும்படியும் அந்த எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எஃப்ஏஏ உத்தரவிட்டுள்ளது.
யுனைடெட் எயார்லைன்ஸ் மற்றும் எஃப்ஏஏ உடன் ஒருங்கிணைந்து ஆய்வு பணிகளில் உதவிட போயிங் இயந்திர பொறியை உருவாக்கிய பிராட் அண்ட் வொய்ட்னி நிறுவனத்தின் சார்பிலும் தனியாக ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டென்வரிலிருந்து ஹவாயியி தலைநகர் ஹானலூலு நோக்கிப் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் போயிங் 777 விமானத்தின் இயந்திர பொறியில் தீப்பிடித்ததையடுத்து அந்த விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் போயிங் விமானங்களின் பயன்பாட்டில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு அனைத்து போயிங் 777 விமானங்களையும் ஆய்வுக்குட்படுத்துமாறு யுனைடெட் எயார்லைன்ஸை கேட்டுக் கொண்டுள்ளது.
இயந்திர பொறியில் தீப்பிடித்த சம்பவத்தையடுத்து போயிங் 777 விமானங்களை பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக யுனைடெட் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுதவிர தீப்பிடித்த இயந்திர பொறியின் சில பகுதிகள் டென்வர் நகரின் புரூம்ஃபீல்டில் வீடுகளின் மீது விழுந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.