கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் தலையை நேற்று இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானவின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயற்பட்ட காலப்பகுதியிலேயே இந்த பெண்ணை சந்தித்துள்ளார்.
ஹேஷா வித்தானவின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயற்படுவதற்கு முன்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயற்பட்டுள்ளார்.
சார்ஜன்ட்டாக இருந்த அவர் உப பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்ற பின்னர் சந்தேக நபர் பாதுகாப்பு பிரிவிலிருந்து விலகி புத்தள பொலிஸ் பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இந்த பெண்ணுடனான தொடர்பு தொடர்பில் சந்தேக நபரின் மனைவி அறிந்திருந்த நிலையில் அவர்களுக்கு இடையில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
பிள்ளைகள் மற்றும் மனைவியைக் கைவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு 30 வயதுடைய காதலி தொடர்ந்து இந்த அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளமையினால் இருவருக்கும் இடையில் பல முறை சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபரும் அந்த பெண்ணும் ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள விடுதிக்குச் சென்றிருந்த போது இந்த திருமணம் தொடர்பில் சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு அறையையும் சுத்தம் செய்துள்ளதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது
அந்த பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்த பின்னர் உடலிலிருந்து தலையை வெட்டி எடுத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெண்ணை கொலை செய்துவிட்டு உடலை விடுதியிலேயே வைத்துச் சென்ற அதிகாரி பின்னர் ஹங்வெல்ல நகரத்திற்குச் சென்று பை ஒன்றும், கழுத்தை வெட்டுவதற்குக் கத்தி ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.
பெண்ணை கொலை செய்த பின்னர் இரத்த கறைகளைக் கழுவி சுத்தம் செய்வதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எனினும் அறையிலிருந்து இரத்த கறைகளும் பெண்ணின் தலைமுடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கொழும்பிற்கு வரும் போது அவரது தோள்பட்டையிலும் பெரிய பை ஒன்று காணப்பட்டது. அதில் அந்த பெண்ணின் தலை இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பின்னர் அந்த நபர் தனது வீட்டை நோக்கிச் செல்லும் போது தலையை ஏதாவது ஒரு இடத்தில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் படல்கும்புர நகரத்திற்குச் சென்று கடைகள் பலவற்றில் விஷகுப்பிகள் கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளார். விஷ குப்பிகள் கொள்வனவு செய்தவர்கள் தனது பிள்ளைகளுக்கு ஐஸ்கீரிமும் கொள்வனவு செய்துள்ளார். அங்கிருந்து வீட்டிற்குச் சென்றவர் வீட்டில் வைத்து இறுதி கடிதத்தை எழுதியுள்ளார்.
விடுதியில் உப பொலிஸ் அதிகாரி மற்றும் காதலி தங்கள் தகவல்களை வழங்கியிருந்த நிலையில் அதன் மூலம் பொலிஸார் அவரை வீட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் வீட்டைச் சுற்றிவளைத்துச் சோதனையிடும் போது அவர் மிகவும் நுட்பமான முறையில் காட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
அங்கு கடந்த 2ஆம் திகதி இரவு சந்தேக நபர் விஷம் அருந்திவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் அணிந்திருந்த ஆடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.