கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி 2023 இல் நிறைவடையும் – ரோஹித அபேகுணவர்தன

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகளை 2023 இல் நிறைவடைய செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

அத்தோடு இதனை 1320 மீற்றர் நீளத்திற்கும் , 75 ஹெக்டயர் பரப்பளவிற்கும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் றோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

440 மீற்றர் நீளம் , 20 ஹெக்டேயர் பரப்பளவில் காணப்படும் கிழக்கு முனையத்தை 1320 மீற்றர் நீளம் , 75 ஹெக்டயர் பரப்பளவிற்கும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான செலவு 115 பில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக துரிமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டங்களை முழுமையாக நிறைவடையச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

தென் ஆசியாவில் முக்கியத்துவம் மிக்க துறைமுக முனையமாக இதனை கட்டியெழுப்புவது எமது இலக்காகும். சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதன் செய்பாடுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு துறைமுக அதிகார சபையுடன் இணைந்து கிழக்கு முனையத்தையும் மேற்கு முனையத்தையும் அபிவிருத்தி செய்து , கொழும்பு துறைமுக கட்டமைப்பை ஆசியாவில் பிரதான துறைமுகமாக மாற்றுவது எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.