இரணைதீவில் பகுதியில் தொடரும் பதற்ற நிலை;சடலங்களை உள்ளே விடமாட்டோம் – மக்கள் திரண்டு எதிர்ப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் உடல்கள் மக்களின் எதிர்ப்பை மீறி அடக்கம் செய்வதற்காக இரணைதீவுக்கு நேற்று கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அங்கு நேற்று பெருமளவானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இரணைதீவுக்குள் சடலங்களை அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். தங்களை மீறி அடக்கம் செய்ய முற்பட்டால் அது பெரும் கலவரத்தில் முடியும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

இதேவேளை, வழக்கத்துக்கு மாறாக அதிகளவு கடற்படையினரும் நேற்று முழுவதும் இரணைதீவில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை நிலவி வருகிறது.

நேற்று இங்கு அடக்கத்துக்காக சடலங்கள் எடுத்துவரப்படலாம் எனத் தகவல்கள் வெளியானபோதும் நேற்றிரவு வரை அவ்வாறு எந்தவொரு சடலமும் எடுத்துவரப்படவில்லை.

இதேவேளை, சடலங்களைப் புதைக்க ஏதுவாக அங்கு கடற்படையினரால் குழிகள் தோண்டப்பட்டு தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அந்தக் குழிகளை மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.

இந்நிலையில் தமது எதிர்ப்பை மீறி சடலங்களை எடுத்துவந்தால் அதனை உள்ளே அனுமதிக்காது முழு மூச்சாக எதிர்ப்போம் எனக் கூறி நேற்று முழு நாளும் அங்கு சுமார் 300-க்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர். நேற்றிரவும் அவர்கள் அங்கேயே கூடியிருந்தனர்.

உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் நிலைப்பாட்டிலிருந்து அரசு மாறாத நிலையில் அடக்கத்துக்கு அனுமதிக்கப்போவதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் உள்ளதால் தொடர்ந்து இரணைதீவில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.