சமூக வலைத்தள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு துரித தீர்வை வழங்க நடவடிக்கை- இராணுவம்

இலங்கையில் புகழ்பெற்ற பெண்களின்  நற்பெயருக்கு  சமூக ஊடகத்தினூடாக ஏற்படுத்தப்படும் களங்கம் காரணாமாக மன அழுத்தம் மற்றும் பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்களுக்கு அரசாங்கம் என்ற வகையில்  உடனடி தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும், போர் வீரர்களை பராமரிக்கும் ‘அபிமன்சல’, ஆரோக்கிய விடுதி மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் தாய்மார்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டிய ஜெனரல் குணரத்ன ‘அத்தகைய பெண்மணிகளின் சகிப்புத்தன்மை மகத்தானது’ என்று கூறினார்.

யுத்தத்தின் போது இத்தகைய மன அழுத்தம் மற்றும் துன்பங்களை தாம் எதிர் நோக்கியதாகவும் போர் வீரர்களின் தாய்மார்களுக்கும் மனைவிகளுக்கும் ஒட்டுமொத்த தேசத்தினது அன்பும் கௌரவமும் உள்ளதென உறுதியாக நம்புவதாக அவர் மேலும் கூறினார். அத்துடன் ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கைப் பெண்ணுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.