இளம் பெண் ஒருவரை கொலை செய்து, அவரது சடலத்தை பயணப் பெட்டி ஒன்றில் வைத்து கொழும்பில் கைவிட்டுச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேகநபரின் வீட்டிற்கு அருகில் காணப்பட்ட இரத்த மாதிரி கொலை செய்யப்பட்ட பெண்ணுடையதா என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இரத்த மாதிரி கொலை செய்யப்பட்ட பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டால், சந்தேக நபர் அந்த பெண்ணின் தலையை மீண்டும் தனது வீட்டிற்கு கொண்டு சென்றமை உறுதி செய்யப்படும் என டாம் வீதி காவல்துறையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த விசாரணைகளுக்காக சிறப்பு குழு படல்கும்புர பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகரின் காணியில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
ஒரே காணியாக இருந்த போதிலும் அதை இரண்டாக பிரிக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. காணியில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் உள்ளன.
ஒரு மரத்தில் சுமார் ஆறு முதல் ஏழு சொட்டு இரத்தம் காணப்பட்டது. அந்த பகுதியைச் சுற்றியுள்ள காணியில் மேலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தம் பெண்ணுடையதா என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
சந்தேக நபர் தலையை வேறு இடத்தில் மறைத்து வைத்துள்ளாரா அல்லது வீட்டிற்கு எடுத்துச் சென்றாரா என்பதை தீர்மானிக்க சந்தேகநபரின் மகன் மற்றும் மனைவியிடம் பொலிஸார் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை (9) அல்லது புதன்கிழமை (10) க்குள் இறுதி சடங்குகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை,
அத்துடன், டி.என்.ஏ அறிக்கையும் இதுவரையில் பெறப்படவில்லை என்பதால் இறுதி கிரியைகள் தாமதமடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.