கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு

 

கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் செல்வநாயகம் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை காரணமாக பிரதேசசபையினை தவிசாளர் 5 நிமிடங்கள் வரை ஒத்திவைத்த நிலையில் சபைக்குள் தங்கள் வாயைக் கறுப்புத் துணியால் கட்டி உறுப்பினர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களின் மக்கள் பிரதிநிதியை மீள விசாரணைக்கு அழைப்பதென்பது மக்கள் பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து பயணிக்க அச்சம் கொள்ள வைக்கிறது எனவும் தெரிவித்து இன்றைய தினம் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர்,

இந்த சபை அமைந்த நாள் தொடக்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் தமது சபை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் வள்ளுவர் சிலையில் ஈழம் என்ற சொல் இருப்பதாகக் கூறி முதன்முதலில் விசாரணை ஆரம்பித்ததாகவும் பின்னர் அக்கிராச மன்னன் திறப்பு விழா தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பது தொடர்பிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்காக தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் சிலர் பொலிஸாரினால் விசாரணை செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக உறுப்பினர் செல்வநாயகத்திற்கு தற்போது அழைப்பு வந்திருக்கிறது எனவும் இப்போது இந்த நாடே கோவிட் நோயினால் அச்சத்துடன் இருக்கின்ற வேளையில் அவரை கிளிநொச்சியில் கூட விசாரிக்கப்படாமல் கொழும்புக்கு அழைப்பதென்பது உறுப்பினர்களை பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பினர் செல்வநாயகம் அவர்கள் இன்றைய அமர்விற்குத் தான் விசாரணைக்காகச் செல்வதால் சபையில் விடுமுறையினையும் கோரி சபை அமர்வில் பங்குபற்றவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.