பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை பற்றிய முக்கிய விவாதம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை பற்றிய விவாதம் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுவால் 18/03/2021 அன்று நடாத்தப்பட்டது.

இவ்விவாதத்தை சிவோன் மெக்டோனா (Siobhain McDonagh MP) அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். இதற்கு கெளரவ சேர் எட் டேவி (Rt Hon Sir Ed Davey MP) மற்றும் எலியட் கோல்பெர்ன் (Elliot Colburn MP) ஆகியோர் இணை அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

இவ் விவாதமானது முக்கியமாக இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் தொடர்ச்சியான அட்டூழிய குற்றங்கள், இதை இழைப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்பிப்பது பற்றிய விடயங்களில் கவனம் செலுத்தியது.

இலங்கை அரசால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவாதித்தார்கள்.

இதில் கலந்து கொண்டவர்களிடம் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் கொண்டிருந்த கடும் விசனத்தை விவாதத்தில் பரவலாக இழையோடிக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததுடன், பலர் இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதற்கு இருதரப்பு (Bilateral) அல்லது சர்வதேச (International) நடவடிக்கை தேவை என்றும் கருதினார்கள்.

தொடர்ச்சியாக இலங்கை வாழ் தமிழர்களின் நிலை குறித்து கரிசனையுடன் பேசி வரும் சிவோன் மெக்டோனா (Siobhain McDonagh MP), வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting MP), ஸ்டீபன் ரிம்ஸ் (Rt Hon Stephen Timms MP), சேர் எட் டேவி (Rt Hon Sir Ed Davey MP), ரொபேர்ட் ஹால்பன் (Rt Hon Robert Halfon MP), தெரேசா வில்லியர்ஸ் (Rt Hon Theresa Villiers MP), நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் கினோக் (Shadow Foreign Minister Stephen Kinnock MP), சாம் றெர்ரி (Sam Tarry MP), காரெத் தோமஸ் (Gareth Thomas MP), எலியட் கோல்பெர்ன் (Elliot Colburn MP) உட்பட பல கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் நாங்கள் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை, சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் ஒடுக்குமுறைகள் குறித்து அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ச்சியாகவும் விரிவான அடிப்படையிலும் கலந்துரையாடி வருகின்றது.

2015ம் ஆண்டு மனித உரிமை சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் (OISL report) குற்றமிழைத்தவர்களென அடையாளம் காணப்பட்ட நபர்களிற்கு எதிராக சர்வதேச மனித உரிமை மீறுவோருக்கான தடைச் சட்டம் (Global Human Rights Sanctions Regime Act – Magnitsky Act) பாவிப்பது உட்பட முக்கிய தகவல்களை தெரிவித்ததுடன் பிரித்தானிய அரசாங்கத்தினை நோக்கி வினாவெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்மன்ஜீத் சிங் தேசி (Tanmanjeet Singh Dhesi MP), Dr.மத்தியூ ஒபார்ட் (Dr. Matthew Offord MP), கிறிஸ் கிரெய்லிங் (Rt Hon Chris Grayling MP), பொப் ப்ளாக்மன் (Bob Blackman MP), ஜான் மாக்டோனல் (Rt Hon John McDonnell MP) மற்றும் டோன் பட்லர் (Dawn Butler MP) உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

இதில் தைவோ ஓவாடெமி (Taiwo Owatemi MP), அன்னா மேக்லோலின் (Anna McLaughlin MP), மார்கரெட் பெரியர் (Margaret Ferrier MP), அண்டோணி மாங்நல் (Anthony Mangnall MP) மற்றும் ஜிம் ஷன்னோன் (Jim Shannon MP) உட்பட ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை கேட்டதுடன் அறிக்கையிட்டுமிருந்தனர்.

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் கொள்கை மாற்றங்கள் தொடர்பாகவும், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கல் தொடர்பாகவும் இக்கோவிட் (Covid -19) இடர் காலத்திலும் தமிழ் மக்கள் பிரித்தானியாவின் சிறிலங்கா குறித்த வெளியுறவுக் கொள்கைகளில் வலுவான மாற்றத்தை கொண்டு வரவும் பொறுப்புக் கூறல் மற்றும் நீதிக்கான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றார்கள். இவ் விவாதமானது மனித உரிமை சபையில் (UNHRC) இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

இவ் விவாதமானது, பிரித்தானிய அரசாங்கம், மனித உரிமை சபையில் இலங்கையின் மனித உரிமை நெருக்கடி நிலவரத்தை எடுத்துரைப்பதற்கும், மீண்டும் வன்முறை நிகழாமல் தடுப்பதற்கும் (Non recurrence) எதிர்கால அமைதிக்கும் பாதுகாப்பிற்குமான பாதையை வகுப்பதற்கும் வழிவகுக்குமா என்ற காத்திரமான கேள்வியை கேட்டு நிற்கின்றது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பரிந்துரைக்க வேண்டும் என்ற பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் வேண்டுகைக்கு ஆதரவு தெரிவித்து சிவோன் மெக்டோனா (Siobhain McDonagh MP) அவர்கள் இந்த விவாதம் அரங்கேற வழி வகுத்தார்.

சிறிலங்காவின் அத்துமீறல்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க ஒரு சிறப்பு அறிக்கையாளரை (UN Special Rapporteur) நியமிக்கும்படி ஐநா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு டோன் பட்லர் (Dawn Butler MP) சிபார்சு செய்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகளுக்கு பல தடவைகள் வருகை தந்து எம்மோடு இணைந்து செயற்பட்டு வந்த வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting MP) மற்றும் கௌரவ தெரசா வில்லியேர்ஸ் (Rt Hon Theresa Villiers MP) அவர்கள் கோவிட் நெருக்கடிகள் மத்தியில் இடம்பெற்ற மார்ச் 2020 மனித உரிமை கழக அமர்வில் கிடைத்த தங்கள் அனுபவங்கள் பற்றி பகிர்வு செய்தார்கள்.

நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் பெறுமதிமிக்க கருத்துக்களை அவர்கள் தெரிவித்ததுடன் இருதரப்பு மற்றும் சர்வதேச தலையீடுகளை வலியுத்தி தமது வாதங்களை முன்வைத்தனர்.

கௌரவ ஸ்டீபன் ரிம்ஸ் (Rt Hon Stephen Timms MP) அவர்கள், சான்றுகள் சேகரிக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு, சர்வதேச பொறுப்புக் கூறலுக்கு அவற்றின் இன்றியமையாமையையும், இது தொடரபில் சிறிலங்கா காட்டி வந்த தொடர் எதிர்ப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

சேர் எட் டேவி (Rt Hon Ed Davey MP) அவர்கள் பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிற்கான ஆயுத ஏற்றுமதியை தொடர்வதைக் கண்டித்ததோடு, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் OISL 2015 அறிக்கையில் பட்டியலிடப்பட்ட நபர்கள் மீது Magnitsky Act பாணியிலான தடைச் சட்டத்தை பிரயோகிப்பது பற்றி ஆராய்வதற்கு ஊக்குவித்தார்.

ரொபேர்ட் ஹால்பன் (Rt Hon Robert Halfon MP) அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளான, சிறிலங்காவிலும், புலம் பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். சிறிலங்காவில் நிகழக்கூடிய எதிர்கால வன்முறைகளை (Cycles of Violence) தடுக்கவும், அங்கு தமிழ் மக்களுக்கான சுயாட்சி (Autonomy) அமைவதை ஊக்குவிக்கவும் என்ன நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் எடுத்து வருகிறது என்று வினவினார்.

பிரித்தானியா தலைமையில் சர்வதேச நடவடிக்கைக்களான முறையான பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஏற்படுத்துதல், தமிழர் சமூகத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல், நடைபெற்றது இனப்படுகொலையே என அங்கீகரித்தல் போன்றவற்றிற்கு இதுவே தகுந்த தருணம் என்றார்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காது வர்த்தக விடயத்தில் சிறிலங்காவிற்கு GSP+ சலுகைகள் வழங்கியமையை நிழல் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் கினோக் (Stephen Kinnock MP) அவர்கள் கண்டித்தார்.

தற்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி விட்டதால், சிறிலங்கா உடனான வர்த்தக உறவை அரசாங்கம் மறு மதிப்பீடு செய்யுமா என்று அவர் அரசாங்கத்தின் மீது கேள்வி எழுப்பினார்.

சாம் றெர்ரி (Sam Tarry MP) தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை தேவை என்பதனை வலியுறுத்தினார்.

இவ் விவாதத்தில் தமிழர்களை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பல வலுவான அறிக்கைகளில் ஒரு சில பகுதிகள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளன.

ஜோன் மெக்டொனெல் (Rt Hon John McDonnell MP) ஐ.நா.வில் எடுக்கப்படவுள்ள தீர்மானம், எம் போன்ற நாடுகள் தனிப்பட்ட முறையில் (Unilateral Action) மேற்கொள்ளக் கூடிய மேலதிக நடவடிக்கைகளை தடை செய்யாதிருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், நாங்கள் அக்கால இலங்கையில் நடைமுறையிலிருந்த மூன்று இராச்சியங்களை ஒன்றாக்கி ஆண்டு வந்தோம்.

அவற்றில் ஒன்றான தமிழர் இராச்சியத்தை (Tamil Kingdom) 1948இல் நாம் வெளியேறிய போது அவர்களிடம் மீள ஒப்படைக்காது ஒரு நாடாகக் கையளித்து விட்டு வெளியேறினோம். எனவே, முன்னை நாள் காலனித்துவ ஆட்சியாளர் என்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள இந் நாட்டிற்கு விசேட பொறுப்பு உள்ளது என்ற பொருள்பட உரையாற்றியிருந்தார்.

தமிழர்கள் மீது இழைக்கப்டுவது இன அழிப்பு என்பதனை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர். மார்ச் 2020இல், ஐ,நா மனித உரிமை கழக பொறுப்புக் கூறல் தீர்மானம் 30/1 இலிருந்து சிறிலங்கா வெளியேறியதால் அதன் எதிர்வினையாக எதிர்காலத்தில் வரவிருக்கும் சர்வதேச தீர்மானங்களை எதிர்நோக்கி பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கடந்த ஆண்டிலிருந்தே பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர் சந்திப்புகளை நடாத்தி விவாதத்திற்கு உகந்த களத் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்தது.

இவ் விவாதம் பின்வருமாறு ஒரு தீர்மானத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இம்மன்று:

ஜனநாயக ஆட்சி, சட்ட ஆளுகை, மனித உரிமைகள் இவற்றின் மீதான சிறிலங்காவின் திட்டமிட்ட தாக்குதல், தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு துாபமிடல் ஆகியவை பற்றி வரும் அறிக்கைகளை அக்கறையுடன் நோக்குகிறது.

தற்சமயம் அரசாங்கத்தில் பணி புரியும் உயரதிகாரிகள் உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வருகின்றமை, UNHRC தீர்மானம் 30/1 இருந்து வெளியேறியமை தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது.

அடுத்தடுத்து வந்த ஐக்கிய இராச்சிய அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய குறிப்பிடத் தக்க தலைமைப் பாத்திரத்தை வரவேற்பதுடன், மார்ச் 2021இல் நடைபெறவிருக்கும் மனித உரிமை கழக கூட்டத்தில் ஒரு புதிய காத்திரமான தீர்மானம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய தெளிவான கொள்கை வழிநடத்துதலையும் தலைமையையும் வழங்குமாறு அரசாங்கத்தை வேண்டி நிற்கிறது.

இது மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தால் தொடர்ந்து கண்காணிக்க உதவுவதோடு எதிர்கால விசாரணைகள் மற்றும் வழக்குகளை (investigations and prosecutions) நடாத்தும் பொருட்டு அத்துமீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கவும், அவற்றை பாதுகாத்து பகுப்பாய்வு செய்யவும் வழிசெய்யும் ஒரு பொறிமுறையை கட்டாயப்படுத்தும்; இலங்கை மக்களுக்கு உதவும் வர்த்தகம், முதலீடு, உதவித் திட்டங்கள் மற்றும் இராஜதந்திர இராணுவ உறவுகளை பயன்படுத்தி ஒரு நிலையான ஒத்திசைவான கொள்கையை உருவாக்கவும் அரசாங்கத்தை கோருகிறது.

பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களின் பங்களிப்புக்காக பிரித்தானிய தமிழர் பேரவை மீண்டும் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றது. தமிழர்கள் நாம் ஒன்றுபட்டால் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்பது உறுதி.