மேல் மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பம்

மேல் மாகாணத்தில் சகல பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்று நிரூபத்திற்கமைய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் நாளை மேல் மாகாணத்தில் சகல வகுப்பு மாணவர்களுக்குமான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

மேல் மாகாணத்தில் கொவிட் அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்பட்டமையினால் கடந்த வாரம் 5 , 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஏனைய சகல மாகாணங்களிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகின.

மேல் மாகாணத்தில் ஏனைய வகுப்புக்களுக்கு முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிகமைய மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை உள்ளடங்கிய சுற்று நிரூபம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் , வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்று நிரூபத்திற்கமைய மேல் மாகாணத்தில் ஏதேனும் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுமாயின் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் வரை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்களின் உள நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக பரீட்சை உள்ளிட்டவற்றை நடத்துவது பொறுத்தமானதாக இருக்காது.

அத்தோடு சமூக இடைவெளியைக் கருத்திற் கொண்டு வகுப்பொன்றில் 15 மாணவர்கள் மாத்திரம் காணப்பட்டால் அவர்களுக்கு தினமும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கை 16 – 30 க்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டால் மாணவர்களை இரு பிரிவினராக பிரித்து தனித்தனியே கற்பித்தலில் ஈடுபட வேண்டும். 30 ஐ விட அதி மாணவர்கள் உள்ள வகுப்புக்களில் 3 குழுக்களாக பிரித்து கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு இவ்வாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 9 ஆம் திகதி வழங்கப்பட்டு , இரண்டாம் தவணை ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.