இலங்கை தொடர்பில்!பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான நீதிப்பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர், தாரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணையை வரவேற்கின்றேன்.

இது இலங்கையில் போரின் பின்னரான காலப்பகுதியில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அக்கறை கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அது மாத்திரமன்றி இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான அச்சம் இருப்பதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரதிபலிப்பாகவும் இந்தப் புதிய பிரேரணை அமைந்துள்ளது.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஆதாரங்களை திரட்டுவதையும், கண்காணிப்புக்களை மேற்கொள்வதையும் ஐக்கிய நாடுகள் சபை தொடரவேண்டும் என்றார்.