ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை கொண்ட மனிதர் இராயப்பு ஜோசப்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக வந்த பெரும் செய்தி எம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிக கொடூ­ர­மான போர்ச் சூழலில் பல்­வேறு நிலை­களில் துன்­பங்­களைச் சுமந்­து­ நின்ற மக்களின் துய­ரங்­களைத் துடைக்க அவர் அரும் பா­டு­பட்டார்-என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்

சிங்கள அரசால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச நீதி வேண்டி குரல் கொடுத்தது, மட்டுமல்லாமல் அந்த துயரங்களைத் துடைக்கவும் அயராது பாடுபட்டார். மேலும், சிறையில் உள்ள தமிழ் கைதிகளை சந்தித்து அவர்களின் விடுதலைக்காகவும் பல்வேறு பணிகளை ஆற்றினார்.

முள்ளிவாய்க்கால் உறை நிலைக்கு சென்ற பின்னர் , போர்க்காலத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் அமைத்துகொடுத்தும், போரில் அங்கங்களை இழந்தவர்களுக்கு உதவிகள் செய்தும், இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலமும் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், சிங்கள அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய அயராது உழைத்தார். யுத்தத்தாலும், சுனாமியாலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இல்லம் அமைத்து கொடுத்தார்.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை வெளிப்படையாக துணிச்சலுடன் சொன்ன ஒரு மனிதரும் இவரே.

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட உன்னத மனிதரை இழந்துவிட்டோம் அவர் உயிர் நீத்த பின்னரும் எமக்கான நீதி வெல்லும் வரை எம்முடனே கூட இருப்பார்

பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளிற்காக அயராது குரல் கொடுத்து மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டுமென இறைவனை பிரார்திப்பதோடு,அவரின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது