சுகாதாரத்துறை மேம்படுத்தல் தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை இருதரப்பு பேச்சு

இலங்கையின் சுகாதாரத்துறை சேவையினை மேம்படுத்துவதற்கு தேவையான செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு  வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் சுகாதார சேவையினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை  அண்மையில் இடம்பெற்றது.

இலங்கையின் சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்கு தேவையான செயற்திட்டத்திற்கான யோசனை   அரச தலைவர்களின் இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது  அவதானம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய  இச்செயற்திட்டத்தை செயற்படுத்துவது  தொடர்பில்  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராட்சிக்கும், இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய காரியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுகாதார சேவையினை மேம்படுத்தும்  செயற்திட்டத்துக்கு மேலதிகமாக  இரத்தினபுரி  போதனா வைத்தியசாலையில் இருதய நோயியல் பிரிவை ஸ்தாபித்தல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாய் சேய் பிரிவை நவீனமயப்படுத்தல், தங்காலை  ஆரம்ப வைத்தியசாலையின்  விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை நவீனமயப்படுத்தல், தெஹியத்த  கண்டிய வைத்தியசாலையை அபிருத்தி செய்யல்  ஆகியவை  செயற்படுத்தப்படவுள்ளன.

இலங்கையின் சுகாதார சேவையினை மேம்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இணக்கம் தெரிவித்தமைக்கு அரசாங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி இதன் போது குறிப்பிட்டார்.சுகாதார சேவையினை மேம்படுத்தும் செயற்திட்டத்தை விரைவாக  செயற்படுத்தும் காரணிகளை சுகாதார அமைச்சர் இந்திய  உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினார்.