ஆட்கடத்தல், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இலங்கையுடன் கைகோர்த்தது அவுஸ்திரேலியா

நாடுகளுக்கிடையில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதில் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களின் உறுதிப்பாடுகளை அவுஸ்திரேலியா மிகவும் மதிக்கின்றது என ஒன்றிணைந்த செயற்குழு படையணியின் கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் மார்க் ஹில் தெரிவித்தார்.

2021 ஏப்ரல் 08 ஆம் திகதி இணைய வழியக இடம்பெற்ற வைபவத்தில் ஒன்றிணைந்த பாதுகாப்பு செயற்குழுவின் கட்டளை அதிகாரி மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக இலங்கை பொலிஸுக்கு 5 வான் பரப்பு கண்காணிப்பு ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான ஒன்றிணைந்த செயற்குழுப் படையணியானது, ட்ரோன் மூலம் வான் பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதிகளுக்கான ஒத்துழைப்பை இலங்கையின் பொலிசாருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகள், நாடுகளுக்கு இடையிலான எல்லைகளில் ஏற்படும் குற்றச் செயல்களைத் தடுத்தல் மற்றும் கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் என்பனவற்றைத் தடுக்க இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒன்றிணைந்த செயற்குழு படையணியின் கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் மார்க் ஹில்,

‘நாடுகளுக்கிடையில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதில் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களின் உறுதிப்பாடுகளை அவுஸ்திரேலியா மிகவும் மதிக்கின்றது’ என்று கூறினார்.

‘இந்தத் தருணத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவோரை தடுத்து நிறுத்தி, அவர்களின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும், அவர்களின் கடின உழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்’ என்றும் றியர் அட்மிரல் ஹில் மேலும் கூறினார்.

‘இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து, ஆட்கடத்தல்காரர்களுக்கு வலுவான செய்தி ஒன்றை வழங்குவதோடு, சட்டவிரோத ஆட்கடத்தலை மேற்கொள்வோருக்கும், அவ்வாறு சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோருக்கும் அவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற முடியாது என்ற செய்தியை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து வழங்குகிறது.

இங்கு உரையாற்றிய இலங்கை பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன,

‘இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய புவியியல் அடிப்படையில் பார்க்கும் போது, ஒரே வலயத்தில் அமைந்திருக்கும் அயலவர்கள் என்று கூற முடியும்.

அத்துடன், நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாகவும், எமது நட்புறவுகள் மூலமாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கக்கூடிய பல்வேறு உதவிகன் மூலமாகவும் இரு தரப்பினரும் நன்மையடைகின்றனர். நாம் அதனை மிகவும் கௌரவிக்கின்றோம் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்’ என்று கூறினார்.

மிகப் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட பெருமளவிலான மதிப்பு மிக்க ட்ரோன் இயந்திரங்களை இலங்கை பொலிஸ் நிறுவனத்திற்கு வழங்கியமைக்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்த நன்கொடை மூலம் எமது பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் செயற்பாடுகள் என்பனவற்றுக்கு மேலதிகமாக ஆட்கடத்லைத் தடுத்தல், குற்றச் செயல்கள் மற்றும் சூழல் மாசடைதலைத் தடுத்தல் என்பனவற்றுக்கும் இவை பயன்படுத்தப்படவிருக்கின்றன.

இதன் போது கருத்து வெளியிட்ட இலங்கை ஏ.எப்.பி. உயர் அதிகாரி ரொப் வில்சன்,

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின்  செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்து பல்வேறுபட்ட துறைகளில் தரமுயர்த்த இவை பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

‘இந்த ட்ரோன்கள் மூலம் சாதாரண சந்தர்ப்பங்களில் பார்வையிட முடியாத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்கவும், நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு, குற்றச்செயல்கள் அவதானிப்பு ஆகியனவற்றின் பயன்பாடுகளுக்கும் இவற்றின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது என்றுவில்சன் கூறினார்.

‘உள்நாட்டு மற்றும் சர்வதேச அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சக்திமிக்க கூட்டாண்மை ஊடாக, வலயத்தில் மிகச் சிறந்த பொலிஸ் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியதாக இருப்பதையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம்’

கடல் மார்க்கமாக ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு, ஆட்கடத்தல்காரர்கள் அப்பாவி மக்களை பல்வேறு வழிகளிலும் ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இந்தக் கூட்டாண்மை நடவடிக்கைகள் மூலம் அவுஸ்திரேலியாவின் இலங்கையுடனான ஒத்துழைப்பின் சக்தி வெளிப்படுத்தப்படுவதோடு, கடல் மார்க்கமாக ஆட்கடத்தல் மேற்கொள்வதற்கு எதிராக இலங்கையின் மிக நெருங்கிய ஒரு பங்காளியாக அவுஸ்திரேலியா செயற்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது.

சட்டவிரோத ஆட்கடத்தலை மேற்கொள்வோருக்கும், அவ்வாறு சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோருக்கும் அவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற முடியாது என்ற செய்தியை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து வழங்குகிறது.