தந்தையின் மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்ட 10 வயது மகன் : ஒன்றரை வயது தங்கை பரிதாபமாக

சாவகச்சேரி , சந்திரபுறம் – மட்டுவில் பிரதேசத்தில் தந்தையின் மோட்டார் சைக்கிளில் மோதி ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தாண்டு தினத்தன்று சாவகச்சேரி பிரதேசத்தில் இந்த கவலைக்கிடமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் சந்திரபுறம் – மட்டுவில் பிரதேசத்தில் 42 வயதுடைய தந்தை ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை சாவியுடன் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இதன் போது குறித்த தந்தையின் 10 வயதுடைய மகன் மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டுள்ளார்.

இதன் போது எதிரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த அக்குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இது மிகவும் துரதிஷ்டவசமான தினமாகும். இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன. எனவே வாகனங்களை நிறுத்தி வைக்கும் போது பெற்றோர்  மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.