12 இலங்கை மீனவர்களையும் அழைத்துவர மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை

மியன்மாரின் பதேன் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவிக்கும், 12 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதாக மியன்மார் அரசு அறிவித்துள்ளது.

மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக இதனை அந் நாட்டு அரசு அறிவித்துள்ளதாக  மீன் பிடித் துறை அமைச்சின் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் கல்யானி ஹேவாபத்திரண தெரிவித்தார்.

மீனவர்களின் விடுதலை தொடர்பிலான தகவலை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வாவும் உறுதி செய்தார்.

அதன்படி அம்பகஹகே சாமிக்க இரோஷன் பெர்னாண்டோ, லியனாரச்சிகே நிர்மல ஸ்ரீ லால், ஹேவா சுதுஹக்குருகே சமிந்த, ஹேவா சுது ஹக்குருகே ஜயந்த, தெவுந்தர கொடிப்பிலி சஹன் சத்சர ஹேமந்த,  தசநாயக்க முதியன்சலாகே ருவன் மதுஷங்க, அம்பகஹகே சன்ன மதுஷான் பெர்ணான்டோ,  சுரஞித் நாணயக்கார, வர்ணகுலசூரிய நிரோஷன் பெர்ணான்டோ, தெல்கே கசுன் மதுஷங்க பீரிஸ், ஜயசூரிய குரனகே செபஸ்டியன் லால் பெரேரா, வர்ணகுலசூரிய அனுராங்க சானக பெர்ணான்டோ ஆகிய 12 மீனவர்களுமே விடுதலை பெற்றுள்ளவர்களாவர்.

நேற்று 17 ஆம் திகதி மியன்மாரின் தேசிய பொது மன்னிப்பு தினமாகும். அதனை ஒட்டியதாக இந்த 12 பேரையும் விடுதலை செய்ய மியன்மார் அரசு நடவடிக்கை எடுத்ததாக மியன்மார் தூதரக தகவல்கள் தெரிவித்தன.

முன்னதாக மேற்படி 12 இலக்கை மீனவர்களும்,  கடந்த ஜனவரி மாதம் திருகோணமலையிலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்றிருந்தனர்.

இந் நிலையில், மியன்மார் கடல் எல்லைக்குள் அத்து மீறியதாக கூறி இந்த 12 பேரும் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மியன்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் மியன்மார் பொலிஸாரால் குறித்த 12 இலங்கை மீனவர்களுக்கும் எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் அந் நாட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மியன்மார் கடல் எல்லைக்குள் அத்துமீறியமை,  மியன்மார் கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை,  மியன்மார் கடர்படையினரின் கட்டளைகளை மதிக்காமை,  மியன்மாருக்குள் உட்பிரவேசிக்க முயன்றமை ஆகியனவையே அந்த குற்றச்சாட்டுக்களாகும்.

இது குறித்த வழக்கு 5 தவணைகள் மியன்மார் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டிருந்தன. எனினும் இதன்போது, மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் எந்த அதிகாரியும் அவ்வழக்குத் தவணைகளில் பங்கேற்று, மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையிலேயே கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி மியன்மார் நீதிமன்றம் 12 இலங்கை மீனவர்களுக்கும் சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

மீனவர்கள் பயணித்த படகின் தலைவர்கள் இருவருக்கும் தலா ஐந்தரை வருடங்களும்,  ஏனைய 10 மீனவர்களுக்கும் தலா மூன்றரை வருடங்களும் சிறைத் தண்டனை விதித்தும் மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்தே அவர்கள் 12 பேரும் மியன்மாரின் பத்தேன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் 12 பேரையும் விடுவிக்க, வழக்கு விசாரணைகளின் போதே போதுமான கால அவகாசம் இருந்தும்  அதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் அதனை செய்யத் தவறியதாக  குற்றச்சாட்டுக்கள், தீர்ப்பை அடுத்து எழுந்தன.

இதனை மையப்படுத்தி மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா இராஜினாமா செய்யவும் முயற்சித்தார். இவ்வாறான நிலையிலேயே இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, மியன்மார் அரசிடம் முன்வைத்த  கோரிக்கைக்கு அமைய 12 மீனவர்களையும் அந் நாட்டு அரசு விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந் நிலையில் அவர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கன நடவடிக்கைகளை மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.