பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது – எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்

கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது.

நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என நாட்டை பாதுகாக்கம் தேசிய திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார்.

 

கொழும்பில் உள்ள நாட்டை பாதுகாக்கும் தேசிய திட்ட அமைப்பின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுக நகர பொருளதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்திற்கு அரசாங்கம் எதிராக செயற்படுவது தவறான செயற்பாடாகும்.

நாட்டின் எதிர்காலம் குறித்து அக்கறை  கொண்டுள்ள அனைத்து தரப்பினரது கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. கருத்துக்களை குறிப்பிட்டவருக்கு எதிர்ப்பு தெரிப்பதை விடுத்து அரசாங்கம் உண்மை காரணிகளை நாட்டு  மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இச்சட்ட மூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். இவ்விடயம் குறித்து மக்களை ஒன்றினைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடப்படும் ஒரு சில தவறுகள் எதிர்கால தலைமுறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட கூடாது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில்  பொதுஜன பெரமுன தேர்தல் மேடைகளில்  வழங்கிய வாக்குறுதிகளை  தற்போது நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டும் என பல முறை ஆலோசனை வழங்கியுள்ளோம். நாட்டை  துண்டாக்குவதற்கு 69 இலட்சம் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றார்.