காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் சீனாவும் ஒத்துழைப்பு

உலகின் மிகப்பெரிய கார்பன் மாசுபடுத்தும் இரு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஏனைய நாடுகளுடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

கடந்த வாரம் ஷாங்காயில் இடம்பெற்ற இரு நாள் பேச்சுவார்த்தையின் போது காலநிலைக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஜோன் கெர்ரி மற்றும் சீன பிரதிநிதி ஜீ ஜென்ஹுவா ஆகியோர் இந்த உடன்பாட்டை எட்டினர் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரு நாடுகளும் “காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க ஒருவருக்கொருவர் மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளன. ஏனைய நாடுகள் கோரும் தீவிரத்தன்மையையும் நெருக்கடியையும் தீர்க்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் உலகின் தலைசிறந்த கார்பன் மாசுபடுத்திகளாகும். இது பூமியின் வளிமண்டலத்தை வெப்பமயமாக்கும் எரிபொருள் புகைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை வெளியேற்றுகிறது.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சிகளின் வெற்றிக்கு அவர்களின் ஒத்துழைப்பு முக்கியமானது, ஆனால் மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் தாய்வான் மற்றும் தென் சீனக் கடலுக்கான சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் தொடர்பான உறவுகள் இத்தகைய முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஜோன் கெர்ரியின் ஷாங்காய் பயணம் ஜனவரி மாதம் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து ஒரு அமெரிக்க உயர் அதிகாரி சீனாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.