உண்மையான போராட்டம் இனி தான்

சம்பள விவகாரத்துக்கு கடந்த ஐந்து வருடங்களாக ஆர்ப்பாட்டம் செய்து களைத்துப் போய்விட்ட தோட்டத்தொழிலாளர்கள் இனி மேலதிக கொடுப்பனவுகளுக்கெல்லாம் வீதியில் இறங்கப் போவதில்லை. ‘பந்து’ தொழிற்சங்கங்களின் கைகளில் தான் தற்போது இருக்கின்றது

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட்சம்பளத்தை புத்தாண்டுக்கு முன்பதாக கம்பனிகள் வழங்கி விட்டாலும் கூட பெருந்தோட்டத்துறையில் உள்ள சகல தொழிலாளர்களுக்கும் இத்தொகை இன்னும் சென்றடையவில்லை. இந்த  விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் இன்னும் எதுவும் கூறவில்லை.

 

22 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழுள்ள தோட்டங்களில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கே ஆயிரம் ரூபா நாட்சம்பளம் கிடைத்துள்ளது.

அரசாங்கத்துக்கு சொந்தமாக உள்ள ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்ட யாக்கத்துக்கு கீழ் இயங்கும் தோட்டங்களில் தொழில் புரிவோருக்கு, இறுதியாக கைச்சாத்திடப்பட்ட  கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாட்சம்பளமாக 750 ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. எனவே கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று கூற முடியாது.

அதேவேளை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்திலுள்ள எந்தவொரு சலுகைகளும் வழங்கப்படவில்லை.

இதில் வேதனையான விடயம் என்னவெனில் மார்ச் மாதம் தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவுகளையும் தோட்ட நிர்வாகங்கள் வழங்கவில்லை. ஆனால் அந்த கொழுந்துக்கான வருமானத்தை அவை பெற்றுக்கொள்ளப் போகின்றன. பறித்து கொடுத்த தொழிலாளர்களுக்கு ஒரு சதமேனும் இல்லை.

அது குறித்து தமது மேலிடத்திலிருந்து  அனுமதி கிடைக்கவில்லையென சில தோட்ட நிர்வாகங்கள் பதில்  கூற, பல இடங்களில் அக்கொடுப்பனவு தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வராததால் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி ஆயிரம் ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட்ட காலம் சித்திரை புத்தாண்டுக்கு அண்மித்த காலமாகையால் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை சந்தித்து இந்த விபரங்கள் குறித்து இன்னும் தகவல்களை திரட்ட ஆரம்பிக்கவில்லை.