நச்சுத் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதா..? தீவிரப்படுத்தப்படும் விசாரணை

சுங்கம், காவல்துறை மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நச்சு தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனினும் எண்ணெய் விற்பனைக்கு அனுப்புவதில் சட்டத்தை மீறிய இறக்குமதியாளர்கள் தண்டிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் இருந்து வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் இரண்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள், அஃப்லொடொக்சின் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை விநியோகித்திருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறையின் துணை இயக்குநர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் சேமிப்பு கிடங்குகள் எங்கு இருக்கின்றன அல்லது தேங்காய் எண்ணெய் எவ்வாறு வைக்கப்படுகிறது என்பது குறித்து எந்த விவரக்குறிப்பும் இல்லை.

எனினும் தேங்காய் எண்ணெயை நுகர்வோருக்கு அனுப்ப முடியாது என்பதுதான் நிபந்தனை. இதன்காரணமாக தேங்காய் எண்ணெய் சந்தையில் கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக சில்வா தெரிவித்துள்ளார்.