கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் மிகவும் சர்ச்சைகளை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகள், வெலிகடை சிறைச்சாலை கொலைகள் உட்பட பல கொலை வழக்குகளை விசாரணைக்கு எடுக்காது நீக்குவது தொடர்பான யோசனை ஒன்றை ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது அவசரமாக செய்யும் வேலை. ஒளித்து செய்யும் வேலை. நாடாளுமன்றத்திற்கு யோசனை ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் 8, 9, 10 பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற யோசனையை கொண்டு வந்துள்ளனர்.
8 என்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் பலரது குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது. இதனை தவிர 9 மற்றும் 10ஆவது பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்து வருகின்றனர்.
இதில் குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவை அனைத்தையும் நீக்க வேண்டும் என்று யோசனையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் லசந்த விக்ரமதுங்க, நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலைகள், வெலிகடை சிறைச்சாலை கொலைகள், பிரகீத் ஹெக்னேலிகொட கடத்தல் சம்பவம், கீத் நொயார் கடத்தல் சம்பவம் போன்ற குற்றவியல் வழக்குகள் அடங்குகின்றன.
இந்த யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்த வழக்குகள் அனைத்தும் இரத்தாகிவிடும். இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டியதில்லை என்று கூறுகின்றனர்.
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை நாடாளுமன்றத்தில் இப்படியான யோசனை எப்போதும் கொண்டு வரப்பட்டதில்லை. இது மிகவும் பாரதூரமான பிரச்சினை எனவும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.