வவுனியாவில் கடத்தப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் பொலிசாரால் மீட்பு: இளைஞன் கைது

வவுனியா, இலுப்பையடிக்கு அண்மித்த குடியிருப்பு பகுதியில் வைத்து கடத்தப்பட்ட சிறிய ரக வாகனம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று (21) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் சிறிய ரக வாகனம் ஒன்றை நிறுத்தி விட்டு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் இயங்கு நிலையில் இருந்த குறித்த வாகனத்தை  எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து விநியோகஸ்தர்களால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் அவர்கள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், அங்கிருந்து வாகனத்தை எடுத்துச் சென்ற நபர் வவுனியா, மன்னார் வீதி வழியாக குருமன்காடு பகுதியில் பயணித்த போது மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிசார் மோட்டர் சைக்கிளில் பயணித்த நிலையில் காயமடைந்தவரை, வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குறித்த வாகனத்தையும் அதனை செலுத்தி வந்த சாரதியையும் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதன்போது குறித்த வாகனமே கடத்தப்பட்டதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞர் ஒருவரையும் வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த கடத்தல் மற்றும் விபத்து சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும், போக்குவரத்து பொலிசாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.