யாழில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் பலி!

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கி குடும்பப்பெண்யொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருந்தினி (வயது-37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப்பந்தலின் கால் ஒன்றில் குடும்பப்பெண் பிடித்துள்ளார். அதன் போது , குறித்த பந்தலில் இணைக்கப்பட்டிருந்த மின்குமிழுக்கு சென்ற வயரில் சேதம் ஏற்பட்டு , மின்  ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

அவரைக் காப்பாற்ற கணவர் முற்பட்ட போது அவருக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. சம்பவத்தையடுத்து குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். எனினும் இரண்டு நாட்களின் பின் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.