இனப்படுகொலை நடந்தமைக்கு போதுமான ஆதாரங்களில்லை எம்.ஏ.சுமந்திரன்!

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை சட்டரீதியாக நிரூபிக்க போதுமான ஆதாரங்களில்லை. இனப்படுகொலை என்ற சொல்லை அரசியல்வாதிகளும், சட்டத்தரணிகளும் பாவிக்க வேண்டாம் என்றே நவநீதம்பிள்ளையும் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணசபையினால் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் உண்மையிலலையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பேட்டியொன்றின் போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது. ஆனால் குற்றவியல் நீதிமன்றத்தில் நிருபிக்க பேசுகிறோமா, அரசியல் சமூக தளத்தில் பேசுகிறோமா என்பது முக்கியமானது.

குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்கும் விடயத்தில் கவனமாக பேச வேண்டும். அதை நிரூபிக்க பேதுமான ஆதாரங்களில்லையென்பதே எனது நிலைப்பாடு.

அண்மையில் இணையவழி கலந்துரையாடல் நடந்தது. அதில் விக்னேஸ்வரன், சம்பந்தன் போன்றவர்களும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நவநீதம் பிள்ளையிடம் 3 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 2 கேள்விகள் இனப்படுகொலை தொடர்பானது. இனப்படுகொலை தொடர்பான முதலாவது சர்வதேச நீதிமன்ற விசாரணையுடன் தொடர்புபட்டவர் என்ற அடிப்பயைில் நவநீதம் பிள்ளை ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அந்த சொல்லை கவனமாக பாவிக்க வேண்டும். அது சட்ட வியாக்கியானமான சொல். சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள் அந்த சொல்லை பாவிக்க வேண்டாம். ஊடகவியலாளர்கள் அதை பாவிப்பார்கள் என கூறினார்.

தற்போது எமது வரலாற்றை, பண்பா்ட்டை, அழிக்கும் இனப்படுகொலையின் கூறுகள் இடம்பெற்று வருகிறது. மக்களை பலவந்தமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது இனப்படுகொலை. அவுஸ்திரேலியாவில் பழங்குடியினரை பலவந்தமாக இடம்மாற்றிய வழக்கில் ஒரு நீதிபதி அதை இனப்படுகொலை என கூறினார். ஏனைய இருவரும் அதற்கு மாறாக தீர்ப்பளித்தனர்.

இந்த சொல்லை சட்டரீதியாக நிரூபிக்க கவனமாக செயற்பட வேண்டும்.அது சட்டநுணுக்கமான விடயம்.

வடக்கு மாகாணசபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். அதில், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்றே கூறப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை சர்வதேச குற்றமாக இன்னும் இணைக்கப்படவில்லையென்றும் அதை குற்றமாக இணைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். அதாவது இனப்படுகொலை நடக்கவில்லையென்றே அவர்கள் கூறுகிறார்கள்.

அத்துடன், கூட்டமைப்பின் தலைமை ஒரு காலத்தில் எனக்கு வழங்கப்பட்டால் அதை பொறுப்பேற்க தயாராக இருக்கிறேன் என்றார். நான் கட்சி தலைமையை ஏற்கும் நோக்கத்துடன் அரசியலுக்கு வரவில்லை. ஒரு அரசியல் தீர்வு முயற்சிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். ஆனால் பின்னாளில் பல பொறுப்புக்கள் எனக்கு வந்தது. அந்த பொறுப்புக்களை நான் தட்டிககழிக்கவில்லை. அதேபோல, கட்சி தலைமையை ஏற்கும் நிலை வந்தால், அதை ஏற்பேன் என்றார்.