5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அடுத்த வாரத்திலிருந்து வழங்கத் தீர்மானம் – வாசுதேவ

நாளாந்த கூலித்தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் அல்லாதோர் மற்றும் வருமானம் இல்லாத குடும்பத்தினருக்கு அடுத்த வாரம் தொடக்கம்  ஐயாயிரம் ரூபா நிவாரணத் தொகையை  பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

எனினும் நீர்,மின் கட்டண சலுகைகள் வழங்கப்படாது எனவும் அவர் கூறினார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மக்களின் நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்காக  முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச்செய்வதோ அல்லது மக்களின்  வாழ்கையை பாதிக்கும் விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதோ அர்த்தமற்ற ஒன்றாகும்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதே வேளையில் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த சவால்களுக்கு மத்தியில் கொவிட் -19 வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

எனினும் இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தீர்மானம் எடுப்பது இலகுவான விடயமல்ல, அரசாங்கம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தே இவ்வாறான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது.

கொவிட் நிலைமைகளில் நீண்டகால தீர்மானம் என எதனையும் எடுக்க முடியாது. அவ்வப்போது சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.

இப்போது வரையில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் கையாண்டுள்ள விதம் ஆரோக்கியமானதாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல மக்களுக்கும் சலுகைகளை கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச ஊழியர்கள் இல்லாதவர்கள், நாளாந்த தொழில் புரிவோர், வருமானம் இல்லாதவர்கள் என சகலருக்கும் அடுத்த வாரத்தில் இருந்து 5000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளோம்.

அடுத்த மாதத்திற்கான நெருக்கடி நிலைகளில் இருந்து மக்கள் ஓரளவு தம்மை மீட்டுக்கொள்ள இது உதவியாக அமையும் என கருதுகின்றோம். எனினும் நீர் கட்டணம், மின் கட்டணம் என்பவற்றில் சலுகைகள் வழங்குவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.