வட்ஸ் அப் தனியுரிமை கொள்கை வழக்கு ; தனி உரிமைக்கு எதிரானவை அல்ல – இந்தியா விளக்கம்

புதிய தனியுரிமை கொள்கைகள், தனி உரிமைக்கு எதிரானவை அல்ல என்று ‘வட்ஸ்-அப்’ செயலிக்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன.

இந்நிலையில், பேஸ்புக், வட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்திய மத்திய அரசு கடந்த பெப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது.

இதற்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க ஒப்புதல் அளிக்க மே 25 ஆம் திகதி வரை அவகாசம் தரப்பட்டது.

இதற்கு கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன.

ஆனால் வட்ஸ்-அப் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் இந்திய மத்திய அரசின் சட்டவிதிகள், தனி உரிமையை பாதிக்கும் என்று கருதுகிறது.

எனவே இந்திய மத்திய அரசின் இந்த சட்ட விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றில்  வழக்கும் தொடர்ந்தது.

இந்த நிலையில் இந்திய மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நேற்று ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது.

அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

* இடைநிலை வழிகாட்டுதல்களுக்கு எதிராக வட்ஸ்-அப் கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சி ஆகும்.

* இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள், சமூக ஊடக நிறுவனங்கள் சட்டரீதியான குறுக்கீட்டை அனுமதிக்க வேண்டும் என்று கூறுகின்றன. இந்தியா கேட்பது, மற்ற நாடுகள் கேட்பதில் இருந்து எவ்வளவோ குறைவானதுதான்.

* இந்தியாவின் இடைநிலை வழிகாட்டுதல்கள், தனி உரிமைக்கு (அந்தரங்க உரிமைக்கு) மாறானவை என்று சித்தரிக்கும் வட்ஸ்-அப் முயற்சி தவறாக வழிநடத்தப்படுவதாக உள்ளது.

தனி உரிமை அடிப்படை உரிமை

* தனி உரிமையை அரசு அடிப்படை உரிமை என்று அங்கீகரிக்கிறது. அதை தனது குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதில் உறுதியாகவும் உள்ளது.

* இந்திய மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும் தனி உரிமையை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. ஆனால், அதே நேரத்தில் சட்டம், ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது என்று இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

* தனிஉரிமைக்கான உரிமையை அரசு மதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட செய்தியின் தோற்றத்தை வட்ஸ்-அப் வெளிப்படுத்த தேவைப்படும்போது, அந்த தனி உரிமைக்கான உரிமையை மீறும் நோக்கம் இல்லை.

* இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடன் இணக்கமான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது மேலே குறிப்பிட்டுள்ளவற்றுடன் தொடர்புடைய குற்றங்களை தூண்டுதல் அல்லது கற்பழிப்பு, ஆபாசம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கும், விசாரிப்பதற்கும் அல்லது தண்டிப்பதற்கும், ஒரு செய்தி பற்றிய தகவல்கள் அவசியமானால்தான் தேவைப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.