ஜோ பைடனின் வெற்றிக்கு பல உலகத் தலைவர்கள் உடனடியாக பாராட்டுகளை தெரிவித்துள்ள அதேவேளை ரஷ்யாவும் சீனாவும் இதுவரை பைடனை வாழ்த்துவதை தவிர்த்துள்ளன.
மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியே முதன்முதலாக பைடனை வாழ்த்தியவர்.
அமெரிக்க ஊடகங்கள் பைடனின் வெற்றியை அறிவித்து 24 நிமிடங்களுக்குள் அவர் தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
எனினும் இதற்கு மாறாக 2016 இல் டிரம்ப் பெற்ற வெற்றியுடன் தொடர்புள்ளவர் எனக் கருதப்படும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பைடனை வாழ்த்துவதை தாமதமாக்கி வருகின்றார்.
சீனா ஜனாதிபதி ஜின்பிங்கும்; பைடனை வாழ்த்துவதை தவிர்த்துக்கொண்டுள்ளார்.
டிரம்பின் தடைகளால் பாதிக்கப்பட்ட நாளொன்றிற்கு 500 கொரோனா வைரஸ் மரணங்களை எதிர்கொள்ளும் ஈரான் டிரம்ப் வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடியதுடன் அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி ஹசான் ருகானி டிரம்பிற்கும் புதிய ஜனாதிபதிக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
டிரம்பின் பாதிப்பை ஏற்படுத்தும் கொள்கையை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள் அதனை எதிர்த்துள்ளனர். அடுத்த நிர்வாகம் இந்த வாய்ப்பை தனது கடந்த கால தவறுகளை சரி செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொற்களை விட செயலே முக்கியம் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க தேர்தல்கள் தாராளவாதத்தின் அழுக்குப்படிந்த முகத்துக்கு ஓர் உதாரணம் என தெரிவித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் அயத்தொல்லா அலி கமேனி, தேர்தல் அமெரிக்க ஆட்சியின் தார்மீக அரசியல் வீழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
துருக்கியிலும் பைடனின் வெற்றியை தொடர்ந்து பதற்றம் தென்பட்டுள்ளது. பைடன் சிரிய குர்திஸ் இனத்தவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது. மத்திய கிழக்கில் துருக்கியின் நோக்கங்களிற்கு தடையாக விளங்கக்கூடாது என ஜனாதிபதி எயிப் எர்டகோனிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் தோல்வி பழைய நண்பர்கள் மத்தியிலான உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தாது,தொடர்பாடல்கள் தொடர்ந்தும் அதேபோன்று காணப்படும். ஆனால் நிச்சயமாக இடைமாற்றுக்காலம் காணப்படும் என துருக்கியின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
துருக்கி பைடனின் வெளிவிவகார கொள்கையை உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பைடனும் துருக்கியும் துருக்கி குர்திஸ் அமைப்பான வைபிஜேயிற்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்து மோதிக்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போரில் இந்த அமைப்பே முக்கிய பங்களிப்பை வழங்கியது.
எனினும் துருக்கி அந்த அமைப்பை பிகேகே துருக்கி தீவிரவாத அமைப்பின் ஒரு பகுதியாகவே வைபிஜேயினை கருதுகின்றது.
டிரம்பின் ஆபத்தான இராஜதந்திர முயற்சிகள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைவதற்கு காரணமாக அமைந்தன.
சவுதி அரேபிய அரண்மனையிலிருந்தும் இதுவரை கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. அந்த நாடு தன்னை பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் ஆயுதங்களையே நம்பியுள்ளது.
ஜனநாயக கட்சி யுத்தங்களை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவர விரும்புகின்றது.
குறிப்பாக யேமன் யுத்தத்தில் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்பது ஜனநாயக கட்சியின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.
டிரம்பின் நெருங்கிய நண்பரான இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் உடனடியாக பைடனிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என குறிப்பிடாமல் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அழுத்தங்கள் தொடரும் என்ற உத்தரவாதத்தை இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்கின்றது.