பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இலங்கைப் படைவீரர்கள் சங்கத்தினர் இன்று (13) காலை விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இன அழிப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறியீட்டு ரீதியில் பொப்பி மலர் அணிவித்தனர்.

சர்வதேச ரீதியில் உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூரும் பொருட்டு நவம்பர் 11ஆம் திகதி உலக பொப்பி மலர் தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், அதனை முன்னிட்டு இலங்கையில் பொப்பி மலர் நினைவு தினம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் உள்ள நினைவுத் தூபிக்கு அருகில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பொப்பி மலர் விற்பனை இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொப்பி மலர் விற்பனையின் மூலம் பெறப்படும் நிதி பாதுகாப்புப் படையினரின் ஓய்வூதியம் மற்றும் நலன்புரி சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை படைவீரர்கள் சங்கத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட, வயோதிபர் இல்லத்தை நாடும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்காக பொலன்னறுவையில் நிர்மாணிக்கப் படவுள்ள வயோதிபர் இல்லத்தின் கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளல், இராணுவ வீரர்களின் நலன் கருதி சீட்டிழுப்பொன்றை ஆரம்பித்தல், பிரித்தானியாவில் அமைந்துள்ள அரச பொதுநலவாய சேவைகளின் சங்கத்தினால் இந்நாட்டிற்கு அனுப்பப்படும் பொப்பி மலர்களுக்கு இலங்கையில் விதிக்கப்படும் சுங்க வரியை நீக்குதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்துவதாகத் தெரிவித்தார். நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பொப்பி மலர்களுக்கு இலங்கை சுங்கத்தினால் விதிக்கப்படும் வரியை நீக்குவது தொடர்பில் பிரதமர் அச்சந்தர்ப்பத்திலேயே கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் இலங்கை படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வுபெற்ற), இலங்கை படைவீரர்கள் சங்கத்தின் உப தலைவர் (இராணுவம்) மேஜர் ஜெனரல் மஹிந்த தம்பன்பொல (ஓய்வுபெற்ற), இலங்கை படைவீரர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லெப்டினன் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வுபெற்ற), 2020 பொப்பி மலர் குழுவின் தலைவர் குரூப் கப்டன் குமார கிரிந்தே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.