அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கும் புலம்பெயர் இளம் தலைமுறையினரால் தலைமை தாங்கப்படும் TAMIL DIASPORA ALLIANCE (புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பு) க்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் வெவ்வேறு ஐந்து பிரிவினர் கலந்து கொண்டனர்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய அரசியல் பிரிவு (BUREAU OF SOUTH AND CENTRAL ASIAN AFFAIRS), உலகளாவிய குற்றவியல் நீதிப் பிரிவு (GLOBAL CRIMINAL JUSTICE), முரண்பாடு மற்றும் நிலைத் தன்மைக்கான பிரிவு (BUREAU OF CONFLICT AND STABILIZATION OPERATIONS), ஜனநாயகம் மனித உரிமைப் பிரிவு (DEMOCRACY, HUMANR RIGHTS AND LABOUR), உலக பெண்கள் விவகாரப் பிரிவு (OFFICE OF GLOBAL WOMEN’S ISSUES) ஆகிய பிரிவுகளின் பிரதிநிதிகளோடு இச் சந்திப்பு இடம்பெற்றது.
TDA அமைப்பின் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
இச் சந்திப்பில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் மக்கள் மீது கவனம் கொள்ளல், பொருளாதார சீர்திருத்தத்தில் பிராந்தியங்களின் உரிமைக்கும் முனைப்புக்கும் முக்கியத்துவம் அளித்தல், பெண்களின் சமுகப் பெறுமானத்தையும் தலைமைத்துவத்தையும் வளர்த்தெடுப்பது, தமிழ் மக்களின் அரசியல் இருப்புக் குறித்து சர்வதேசப் புரிதலை உருவாக்குவது மற்றும் புலம்பெயர் தமிழ் இளம் தலைமுறைக்கான வாய்ப்பு வெளிகளை அமைப்பது குறித்து உரையாடப்பட்டதாக TDA அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுக்கவும் இணைந்து பணியாற்றவும் தங்கள் விருப்பார்வத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் வெளிப்படுத்தினர் என்றும் சாதகமான நிலை உருவாகும் பட்சத்தில் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு ஏனைய அரசுகளோடும் தாம் பேசும் முயற்சியில் இருப்பதாகவும் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவை முன் கொண்டு செல்லப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.