இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறியுள்ளமை இன்னமும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனிய தூதரகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொடர்ந்தும் பல சவால்களை உருவாக்கிவரும் நிலையில் நாங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்,இந்த சந்திப்பின்போது இலங்கையின் நம்பகதன்மை மிக்க சகாக்கள் என்ற அடிப்படையில் இலங்கைக்கான எங்கள் நீண்ட கால ஆதரவை வெளியிட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகங்களின் மீதும் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பிராந்தியத்தின் பொருளாதார தளமாக மாறும் இலங்கையின் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இலங்கையின் ஏற்றுமதியிலும் எதிர்மறையான தாக்கத்தைஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது,
நீடித்த இறக்குமதி தடை சர்வதேச வர்த்தக அமைப்பின் விதிமுறைகளிற்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது தொடர்ந்தும் கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.