உதயமாகிறது : இன அழிப்புக்கு எதிரான கூட்டமைப்பு!

அரசியற் கட்சிகள், அமைப்புகள் அல்லது அவற்றின் கூட்டுகள் என்ற வேறுபாடுகளையும் தாண்டி இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோரும் ஒரு கூட்டமைப்பினை தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய அரசியல் மற்றும் உரிமைச் செயற்பாட்டாளர்கள் யாழ் நாவலர் மண்டபத்திலும் இணைய வழிமூலமுமாகவும் வடக்கு-கிழக்கு இரண்டு மாகாண மட்டங்களில் இருந்தும் மாவட்டரீதியாக ஒன்றிணைந்து 39 ஆம் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாளான சனிக்கிழமையன்று புதிய முன்னெடுப்பாக அறிவித்துள்ளனர். இன அழிப்புக்கு எதிரான தமிழ்க் கூட்டமைப்பு என்று அதற்குப் பெயரிட்டு இலச்சினையையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளதோடு, பட்டயம் (சாசனம்) ஒன்று எழுதப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் நாளுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் அறியத் தந்துள்ளார்கள்.

சர்வதேச சட்டம் சார்ந்த பட்டயம் (சாசனம்) ஒன்றை உருவாக்கி அதற்கேற்பவும், நடைமுறை விதிகளை வகுத்தும், வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றித்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள இருப்பதாகத் அரசியற் செயற்பாட்டாளரும், தென்மராட்சி பொது அமைப்புகளை ஒருங்கிணைப்பவரும் கல்வியியலாளருமான க. அருந்தவபாலன் அவர்கள் விளக்கமளித்தார்.

தீவு முழுவது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, இன அழிப்புக்கான சர்வதேச நீதியினதோ, இனப்பிரச்சனைக்கான அரசியலமைப்பின் பாற்பட்ட தீர்வினதோ முக்கியத்துவத்தை எவ்விதத்திலும் சர்வதேச சமூகம் குறைத்து மதிப்பிட பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர் தரப்பு அனுமதிக்கக் கூடாது என்று கருத்துவெளியிட்ட அருந்தவபாலன், ஐ.நா. மனித உரிமைப் பேரவை தற்போது மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் பாற்பட்ட நான்கு பணிப்பாணைகளையும் எடுத்துவிளக்கி, அதில் ஒன்றான சாட்சியப் பதிவுக்கான பணிப்பாணையையும் இரண்டாவது பணிப்பாணையான எதிர்காலப் பொறுப்புக்கூறல் உத்திகளை அபிவிருத்தி செய்தல் என்பது பற்றியும் கவனக் குவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் அவசியமானது என்று விளக்கினார். அதுமட்டுமன்றி, இலங்கை வெளிநாட்டமைச்சர்களும் உயர்மட்ட இராஜதந்திரிகளும் குறிவைத்து இயங்கி ஜெனீவாவில் மேலும் நீடிப்புகளையும் விட்டுக்கொடுப்புகளையும் நீர்த்துப்போகச் செய்தலையும் மேற்கொள்ள இடமளிக்கல் ஆகாது என்று ஆவணங்களை எடுத்துக் காட்டி விளக்கினார்.

மனித உரிமை செயற்பாட்டாளரும் பொறியியலாளருமான கலாநிதி எஸ். கணேஸ் (அம்பாறை, மட்டக்களப்பு), வைத்திய கலாநிதி கே. ஜெயகாந்தராஜா (திருகோணமலை), நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (கிளிநொச்சி), முன்னாள் மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் (யாழ்ப்பாணம்), முன்னாள் மாகாண சபை அமைச்சரும் சூழலியற் செயற்பாட்டாளருமான பொ. ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் (மட்டக்களப்பு), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (வவுனியா), அரசியற் செயற்பாட்டாளர் சண்முகலிங்கம் சஜீவன் (யாழ்ப்பாணம், முல்லைத்தீவு) என்று பலரும் இந்த முன்னெடுப்புக்கான அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். இவர்களில் பலர் உரையாற்றித் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

மேலும் பல தாயகச் செயற்பாட்டாளர்களும் ஒரு சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் இணையவழியாக நிகழ்வில் பங்கேற்றுத் தமது கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

அரசியற் செயற்பாட்டாளரும் சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தைச் சேர்ந்தவரும் கணித்துறை ஆசிரியருமான கசேந்திரன் துரைராஜா நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

தாயகத்தில் இருந்து இன அழிப்புக் குறித்த கருத்தியலுடன் முன்னெடுக்கப்படுகின்ற பட்டயம் சார்ந்து 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் செயற்படும் ஓர் கூட்டமைப்பாக இது அமையவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ம. சுமந்திரன் நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தபோதும் உரையாற்றியிருக்கவில்லை. சுமந்திரன் இன அழிப்பு என்ற கருத்தியலோடு உடன்படுகிறாரா என்ற கேள்வியை ஊடகத்தினர் அவரிடம் எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன அழிப்பு என்ற கருத்தியலை ஆழமாக வலியுறுத்தவேண்டியது அவசியம் என்ற கருத்தை கிழக்கில் இருந்து பா. அரியநேத்திரன் அழுத்தமாகத் தெரிவித்தார். திருகோணமலையில் இருந்து உரையாற்றிய வைத்திய கலாநிதி ஜெயகாந்தராஜா தென்னைமரவடி தொடக்கம் திருகோணமலையில் ஆழமாகப் புரையோடிப்போயிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு பற்றி எடுத்தியம்பினார்.

தமிழ் மொழியில் இனப்படுகொலை என்ற சொற்பதத்தையும் இன அழிப்பு என்ற சொற்பதத்தையும் வித்தியாசப்படுத்தி நோக்கவேண்டுமா என்ற கேள்வியும் நிகழ்வில் பங்குபற்றிய சிவசக்தி ஆனந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

சிங்கள மொழியிலும் கூட்டமைப்புக்கான பெயர் இலச்சினையோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ளதோடு, மும் மொழிகளில் இன அழிப்புக்கெதிரான கூட்டமைப்பு தனது ஆவணங்களை வெளிக்கொணரவேணடும் என்ற கருத்தையும் அழைப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12 ஆம் நாளன்று ஜெனீவாவில் ஆரம்பிக்கவுள்ள மனித உரிமைப் பேரவையின் 51 ஆம் அமர்வுக்கு முன்னதாகச் செயற்படவேண்டும் என்றும், அமர்வின் ஆரம்ப நாளன்றே ஜெனீவாவில் தமிழகத் தலைவர்களோடு அணிதிரண்டு ஒன்று கூடி தமிழ்த் தரப்பின் ஒன்றித்த கருத்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அழைப்பாளர்கள் தெரிவித்தனர்.