கோட்டாபயவை கைது செய்யும் நகர்வை முன்னெடுத்துள்ள யஸ்மின் சூகா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் சிரேஷ்ட அதிகாரி யஸ்மின் சூகா, சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் 63 பக்கத்திலான முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கோட்டாபய ஜனாதிபதி சிறப்புரிமைகளை இழந்துள்ளதாகவும், இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது முறைப்பாட்டில் சாட்சிகளையும் பெயரிட்டுள்ளார், ஆனால் அவர்கள் யார் என்பதை வெளியிடவில்லை.

சிங்கப்பூர் உலகளாவிய நீதிமன்ற அமைப்பில் இணைந்த நாடாகும். ஆனால் சூகாவின் கோரிக்கைக்கு சிங்கப்பூர் சட்டமா அதிபர் இன்னமும் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மாலைதீவில் உள்ள கன்ஷி தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 15 நாள் சிங்கப்பூர் விசாவைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

தற்போது எந்த நாட்டில் கோட்டாபய இருக்கிறார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகிவில்லை. ஆனால் அவர் டுபாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.