சுதந்திர ஊடகவியலாளர் அன்டனி வேரங்கவுக்கு விளக்கமறியல்

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ‘அனித்தா ‘பத்திரிகையின்  ஆசிரியர் குழு முன்னாள் உறுப்பினர், சுதந்திர ஊடக வியலாளர் அன்டனி வேரங்க புஷ்பிகவை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கடுவலை நீதிவான் நீதிமன்றம் இன்று ( 28) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் திகதி  இசுருபாய, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி அன்டனி வேரங்க புஷ்பிகவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டும் என பொலிஸார் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு அமையவே, இவ்வாறு அவர் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை ரயில் நிலையம்   முன்பாக நேற்று ( 27) சிவில் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், பின்னர் வீடு நோக்கி செல்ல பஸ் வண்டியில் ஏறி இருந்த போது, பஸ்ஸுக்குள் பிரவேசித்துள்ள 6 பேர் அன்டனி வேரங்க புஷ்பிகவை  பலாத்காரமாக இழுத்துச் சென்று ஜீப் வண்டியொன்றில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்த சட்டத்தரணி நுவன் போப்பகே உள்ளிட்ட குழுவினர் நேரில் கண்டுள்ளதுடன் இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தலையீடு செய்த பின்னர், ஊடகவியலாளர்  அன்டனி வேரங்கவை கைது செய்ததாக பொலிஸார்  மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்ற விசாராணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு , பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை கோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிந்தது.

கோட்டை பொலிஸார் அவரிடம், கடந்த ஜூன் 10 ஆம் திகதி  பொலிஸ் தலைமையகம் முன் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடாத்திவிட்டு, பின்னர் தலங்கம பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். தலங்கம பொலிஸார் அவரை கடுவலை நீதிமன்றில் ஆஜர் செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.