36 மணி நேரத்துக்குள் ஐவர் சுட்டுக் கொலை – நான்கு பேர் படுகாயம்

நாடளாவிய ரீதியில், இன்று (28) நிறைவடைந்த 36 மணி நேரத்தில்   ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவங்களில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

இரத்மலானை, கம்பஹா, அம்பலாங்கொடை பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அம்பலாங்கொடையில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும் இன்று மாலை வரை இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.

இரத்மலானை :

நேற்று (27) இரவு இரத்மலானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  30 வயதான சரித் உமயங்க சில்வா எனும் குறித்த முச்சக்கர வண்டி சாரதி இரு பிள்ளைகளின் தந்தையாவார். அவர் நேற்று இரவு சவாரியின் பின்னர் வீட்டுக்கு வருகை தந்ததும், வீட்டின் கதவை தட்டியுள்ள ஆயுதம் தரித்த நபர்கள் வீட்டின் கதவை திறந்ததும் அவர் மீது சரமரியான துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படு காயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை :

நேற்று ( 27) இரவு அம்பலாங்கொடை – கலகொட பகுதியில், மரண வீடொன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மரண வீட்டுக்கு வருகை தந்த ஒருவரும் வீட்டின் உரிமையாளருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம்  பதிவாவதற்கு 10 மணி நேரத்து முன்பதாக அம்பலாங்கொடை  ஊருபொக்க சந்தியில் வசந்த டி சொய்ஸா எனும் நபர் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவத்துக்கு பழி தீர்க்க,  நேற்று இரவு வசந்த டி சொய்ஸா தரப்பினர்  மரண வீடொன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விரு சம்பவங்களுக்கும் ரீ 56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா சம்பவம் :

கம்பஹா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக நேற்று ( 27) நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பஸ் பொட்டா எனும்  பெயரால் அறியப்படும்  பாதாள உலக  குழு உறுப்பினரான சமன் ரோஹித்த பெரேரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மனிதப் படுகொலை குறித்த வழக்கொன்றுக்காக மேலும் 5 பேருடன் வருகை தந்துள்ள அவர் வழக்கின் பின்னர் நீதிமன்றிலிருந்து வெளியேரும் போது  வெகன் ஆர் ரக காரில் வந்த  அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு, டுபாயில் வசிப்பதாக நம்பப்படும் பாதாள உலக குழு தலைவன்  கனேமுல்ல சஞ்ஜீவவின் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது