ஜனாதிபதி மாளிகையிலிருந்து பொலிஸார் திருடிய பணம் எங்கே? உடன் நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவு

ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக்காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை உடனடியாக நீதிமன்றில்  சிறப்பு அறைக்கையொன்றில் ஒப்படைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று ( 28) உத்தரவிட்டார்.

 

ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் , போராட்டக்காரர்களால், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம்  எண்னி ஒப்படைக்கும் வீடியோ காணொளியை மையப்படுத்தி, அக்காணொளியில் இருந்த நால்வர், கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகளால், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று (28) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவர்களுக்காக மன்றில் ஆஜரான  சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் வாதங்களை அடுத்து கோட்டை நீதிவான்   இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கொழும்பு மத்தி வலய குற்ற விசாரணை பணியகத்தின்  தகவல்கள் படி,

உப பொலிஸ் பரிசோதகர் சந்துருவன் தலைமையிலான குழுவினர் நேற்று (27) முற்பகல் 10.00 மணியளவில்,  டி. மெல் வத்த, கொழும்பு 14 எனும் முகவரியைச் சேர்ந்த  அப்துல் காதர் அப்துல் சலீம் என்பவரை,  இலக்கம் 6, ஹுசைனியா வீதி, கொழும்பு 12 எனும் முகவரியில் வைத்து கைது செய்துள்ளனர்.  ஜனாதிபதி மாளிகைக்குள்  அத்து மீறி பிரவேசித்தமை  அங்கு தங்கியிருந்தமை குறித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உப பொலிஸ் பரிசோதகர் புத்திக தலைமையிலான குழுவினர் நேற்று (27) மாலை 5.00 மணியளவில்  ஜயசமகி மாவத்த, களுபோவில பகுதியை சேர்ந்த  ஜெயராம் உதயகுமார் என்பவரையும் ஜனாதிபதி மாளிகைக்குள்  அத்து மீறி பிரவேசித்தமை  அங்கு தங்கியிருந்தமை குறித்த குற்றச்சாட்டில்  கைது செய்துள்ளனர்.  உப பொலிஸ் பரிசோதகர் புத்திக தலைமையிலான குழுவினர்,  இந்த கைதை முன்னெடுத்த களுபோவில, ஜயசமகி மாவத்தை வீட்டுக்கு ஜெயராம் ஜெயராஜா என்பவரையும் வரவழைத்து அவரையும் கைது செய்துள்ளனர்.

அத்தோடு, நேற்று மாலை 4.30 மணிக்கு,  ஜனாதிபதி  மாளிகைக்குள் அத்து மீறி பிரவேசித்து சட்ட விரோதமாக அங்கிருந்த பணத்தை  தவறாக கையாண்டமை தொடர்பில்  2 ஆம் குறுக்குத் தெரு , வல்பொல, ருக்கஹவில பகுதியைச் சேர்ந்த  அதிகாரம் முதியன்சலாகே  குசல் திம்புல்கஸ்தென்ன  என்பவரை உப பொலிஸ் பரிசோதகர் அசேல தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் கைதின் பின்னர் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,  பின்னர் அவர்கள் இன்று ( 28) கோட்டை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது மன்றில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன,

‘ எனது சேவை பெறுநர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அபத்தமானது.  எனது சேவை பெறுநர்களில் ஒருவர் மீது ஜனாதிபதி மாளிகையிலிருந்து கண்டெடுத்த பணத்தை தவறாக கையாண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து கண்டெடுத்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்தது தவறா?

கடந்த 9 ஆம் திகதி  நடந்த இந்த சம்பவத்தில், பொலிஸார் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை இதுவரை நீதிமன்றில் பாரப்படுத்தவில்லை. அது ஒரு வழக்குப் பொருள். குற்றவியல் சட்டத்தின் 431(1)  ஆம் அத்தியாயம் பிரகாரம் அந்த பணம் உடனடியாக பொலிஸாரால் மன்றில்  ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். 3 வாரங்களாகியும் இன்னும் அது ஒப்படைக்கப்படவில்லை. பொலிஸாரே பணத்தை  தவறாக கையாண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி மாளிகைக்குள்  எனது சேவை பெறுநர்கள் மட்டும் உள் நுழையவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் நுழைந்தனர். எனவே எனது சேவை பெறுநர்களை மட்டும்  விளக்கமறியலில் வைக்க கோருவது நியாமற்றது. எனவே அவர்களை பிணையில் விடுவிக்கவும்.’  என கோரினார்.

விடயங்களை ஆராய்ந்த  நீதிவான் திலின கமகே,  சம்பவம் நடந்து 3 வாரங்கள்  ஆகியும், ஜனாதிபதி  மாளிகையிலிருந்து போராட்டக் காரர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை நீதிமன்றில் ஒப்படைக்காதது ஏன் என விளக்கமளிக்கும் சிறப்பு அறிக்கையுடன் உடனடியாக அப்பணத் தொகையை நீதிமன்றில்  ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அத்துடன்  கடந்த 9 ஆம் திகதி , இலட்சக் கணக்கான மக்கள் கோட்டை  ஜனாதிபதி மாளிளிகைக்குள் நுழைந்ததாக சுட்டிக்காட்டிய நீதிவான், அத்துமீறிய குற்றச்சாட்டில் இந்த நான்கு சந்தேக நபர்களை மட்டும் விளக்கமறியலில் வைக்க முடியாது என அறிவித்து அவர்களை தலா 5 இலட்சம் பெறுமதியான  சரீரப் பிணையில் விடுவித்து வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.