அமைதியான போராட்டங்களுக்கு அனுமதியுள்ளது-இளைஞர்களின் கோரிக்கையை நானும் ஏற்கின்றேன் ரணில்

நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் கோரிக்கையாகக் காணப்பட்ட ஆட்சி முறைமை மாற்றத்தினை தானும் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை தானும் ஏற்றுக்கொள்வதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் ஆகியோர் கட்சி தலைமையகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை வரவேற்றனர்.

நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதியுள்ளது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அதே உரிமை உண்டு என்றும் பல்வேறு திறமைகளைக் கொண்ட இளைஞர்களும் அதில் பங்கேற்றிருந்ததை  தாம் கண்டதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த வேளையில் தான் பதவியேற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பல நடவடிக்கைகளை தற்போது எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.