அவசரகால சட்டத்தை அமுல்படுத்திய கோட்டாபய! நடைமுறைப்படுத்தும் ரணில்-டிலான் பெரேரா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரல்ல. தனக்கு தேவையான வகையில் ஜனநாயக கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை அமுல்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தற்போது அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடித்துள்ளமை நகைப்பிற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

 

கொழும்பில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகளத்தின் மீது கடந்த மே மாதம் 09ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட மிலேட்சத்தனமான தாக்குதல்கள் சகல பிரச்சினைகளுக்கும் ஆரம்பமான காணப்பட்டது.

அன்று அத்தாக்குதல் இடம்பெற்றாமலிருந்திருந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிராதராகி இன்று ஜனாதிபதியாகிருக்கமாட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக கொள்கையினை தனக்கு ஏற்றாட்போல் சந்தர்ப்பத்திற்கு மாற்றிக்கொள்வார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை அமுல்படுத்திய போது அதனை கடுமையாக கண்டித்து அவரை நெருக்கடிக்குள்ளாக்கியவர் இன்று அவசரகால சட்டத்தை பலிவாங்கும் நோக்கில் அமுல்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரல்ல,அவர் மக்கள் மீது அக்கறை கொள்ளபோவதில்லை.

நல்லாட்சி அரசாங்த்தில் சாதாரண சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியவர் தற்போது அவசரகால சட்டத்தை எவ்வகையில் பயன்படுத்துவார் என்பது சந்தேகத்திற்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் தற்போது உள்ள ஆதரவு நிலையற்றது.சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து அரசியல் ரீதியில் புதிய சக்தியை வெகுவிரைவில் உருவாக்கும்.ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டத்தை முடக்க அவசரகால சட்டத்தை பிரயோகித்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்