பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் அவசியம் – அமெரிக்க தூதுவர்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்காக நீதிக்கான அணுகல், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துதல் அவசியமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இந்த சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

குறித்த டுவிட்டர் பதிவில்,

‘இந்த சவாலான கால கட்டத்தில் அமெரிக்கா இலங்கை மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்ற வழிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் , பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதும், நீதிக்கான அணுகல், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை நிலைநிறுத்துவது அவசியமாகும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து , ‘மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து , மக்களின் அபிலாஷைகளுக்கு செவி சாய்க்கும் நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும்.’ என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.