அரச நிர்வாக மாற்றம், அரசியலமைப்பு திருத்தத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – தினேஷ்

அரச நிர்வாக மாற்றம் மற்றும் அரசியலமைப்பு திருத்தத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். சர்வக்கட்சி அரசாங்கத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என வெளிப்படை தன்மையுடன் அழைப்பு விடுத்துள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மதவழிபாட்டை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கமாறு மாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமத தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

சகல தரப்பினரது கோரிக்கைகளுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க சகல கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் சர்வ கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைய வேண்டும் என வெளிப்படைத்தன்மையுடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக மாற்றம் மற்றும் அரசியலமைப்பு திருத்த்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.அரசியலமைப்பு திருத்தம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

அரசியல் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறித்து மக்கள் முன்வைத்த யோசனைகள் அரசியலமைப்பு திருத்தம் ஊடாக செயற்படுத்தப்படும்.

தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை ஆகவே அவர் நாட்டுக்கு தாராளமாக வருகை தரலாம் என்றார்.