சீன கப்பல் விவகாரம் – பின்னணியில் காய் நகர்த்தும் பசில்

நெருக்கடிக்கு வழிவகுத்த சீனக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் இருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு சீன கப்பல் தொடர்பில் சீனாவின் நல்லெண்ணத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிவ் குணசேகர வலியுறுத்தியுள்ளார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இரு நாடுகளும் இணைந்து தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், வேறு தரப்பினர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அணிசேராக் கொள்கையின் படி இலங்கை செயற்பட வேண்டும் எனவும் டியூ குணசேகர வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினையை மேலும் நீடிப்பதற்காக அமெரிக்காவையும் இந்தியாவையும் அவதூறாகப் பேசுபவர்கள் இந்நாட்டில் இருப்பதாகவும், அவர்களின் செயற்பாடுகளை மிகவும் வெறுப்புடன் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.