ஓர் இனத்தை, மொழியை, தேசத்தை அழிக்கும் பணியில் யாழ் இந்துக்கல்லூரி !

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஹிந்தி மொழி வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஈழத்தமிழனத்திற்கும், யாழ் இந்துக்கல்லூரிக்கும் இதை விட ஓர் அவமானத்தையும், தீராப்பழியையும் கல்லூரி நிர்வாகத்தால் செய்ய முடியாது, இதன் எதிர்கால பாதிப்பு என்னவென்று தெரிந்து தான் இதனைச் செய்கிறார்களா?

இதே பாடசாலையில் தான் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் இந்தியத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி லெப்.கேணல் திலீபன் கல்வி கற்றார். இதே பாடசாலையில் தான் பொன்னம்மான், யோகியில் இருந்து ஹிந்தியத்திற்கு எதிராக போராடிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தன்னிகரற்ற பல போராளிகள் கல்வி கற்றார்கள்,

மொழி ஒன்றைக் கற்பதில் தவறில்லை, ஆனால் ஹிந்தி பொருளாதார மொழியும் இல்லை, ஹிந்தி பேசுகின்ற ஒருவர் கூட ஈழத்தில் இல்லை, (இந்திய தூதரக அதிகாரிகள் தவிர) அப்படி இருக்க எதற்காக யாழ் இந்துக் கல்லூரி நிர்வாகம் இப்படி ஓர் வரலாற்று அரசியற் தவறைச் செய்கிறது என்று எனக்கு புரியவில்லை.

ஹிந்தி கற்பிப்பதற்கு பதிலாக செவ்வியற் தமிழை யாழ் இந்துக் கல்லூரியில் கற்பித்திருந்தால் அந்த வரலாற்றுப் பெருமையாவது நிர்வாகத்திற்கு வந்திருக்கும்,
இன,மொழி அடையாளங்களை அழிக்கும் தேவையற்ற ஓர் மொழிச் சுமையை குழந்தைகள் மீது திணிக்கும் அதிகாரத்தை யாழ் இந்துக் கல்லூரி நிர்வாகத்திற்கு வழங்கியது யார்?

ஹிந்தித் திணிப்பை ஏற்காமல் இன்றுவரை போராடும் ஒரே ஒரு இந்திய மாநிலம் தமிழகம், இந்த தேவையற்ற மொழித் திணிப்பிற்கு எதிராக போராடி ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள், இன்றும் ஹிந்திக்கு எதிராக தமிழகத்தில் மக்கள் போராடி வருகிறார்கள், இந் நிலையில்

ஓர் இனத்தை, மொழியை, தேசத்தை அழிக்கும் விசச்செடியை யாழ் இந்துக்கல்லூரியில் நாட்டி இருக்கிறீர்கள், இது வளர்ந்து வீசப் போகும் விசக்காற்றில் அழியப் போவது உங்கள் சந்ததிகளும் தான் என்பதை கல்லூரி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.

திரும்ப திரும்ப கட்டடம் கட்டுவதும் வர்ணம் அடிப்பது மட்டும் தான் பழைய மாணவர் சங்கங்களின் வேலை அல்ல.
இவற்றையும் பார்க்க வேண்டும்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனாக கல்லூரி நிர்வாகத்தின் தமிழினத்திற்கும் மொழிக்கும் எதிரான அறிவற்ற இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திரு. திருக்குமரன்

Jaffna Hindu International Jaffna Hindu College Jaffna Hindu College OBA (UK)