பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?- சூடு பிடிக்கும் அரசியல் களம்

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் ட்ரஸ் விலகியுள்ள நிலையில் அடுத்ததாக யார் பிரதமராக நியமிக்கப்பட போகின்றார் என்ற கேள்வி எழுத்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டோரி தலைமைப் போட்டியின் போது ரிஷி சுனக் லிஸ் ட்ரஸின் திட்டங்களை எச்சரித்திருந்தார்.

ட்ரஸின் வரி குறைப்பு திட்டங்கள் பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டுசெல்லும் எனவும், நிதியில்லாத வரி குறைப்புகளுக்கு உறுதியளித்ததால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டினார்.

இதன்படி, மினி-பட்ஜெட்டின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சுனக்கின் ஆதரவாளர்கள் அவர் நிரூபிக்கப்பட்டதாக நம்புகிறார்கள். தலைமைப் போட்டியில் ரஷி சுனக் கூறிய அனைத்தும் நிறைவேறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு பிரதமராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினரான Penny Mordaunt இந்த வார தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் ஒரு அவசரக் கேள்வியின் போது பிரதமராக விருப்பம் தெரிவித்திருந்தார்.

 மேலும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிட அதிக வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், ரிஷி சுனக் மற்றும் போரிஸ் ஜோன்சன் இடையே பெரும் போட்டி காணப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடந்த மாதம் 5ம் திகதி பிரதமராக பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் வெறும் 45 நாள்களில் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இதன்படி, பிரித்தானிய வரலாற்றில் மிக குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற அடையாளத்தை லிஸ் ட்ரஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

 

எவ்வாறாயினும, லிஸ் டிரஸ்சுக்கு பதிலாக வேறு ஒருவர் பிரதமராக பதவி ஏற்றால் இந்த ஆண்டின் மூன்றாவது பிரித்தானிய பிரதமராக அவர் இருப்பார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.