உலகக்கிண்ண நொக்அவுட் சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இன்று சனிக்கிழமை (26) நடைபெற்ற போட்டியில் டென்மார்க் அணியை பிரான்ஸ் அணி 2:1 கோல்களால் வென்றது.

நடப்புச் சம்பியனான பிரான்ஸ், இவ்வெற்றியின் மூலம் ; இச்சுற்றுப்போட்டியின் நொக்அவுட் சுற்றுக்கு பிரான்ஸ் தகுதிபெற்றுள்ளது.

இச்சுற்றுப்போட்டியில் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி பிரான்ஸ் அணி ஆகும்.

குழு டி இலுள்ள பிரான்ஸ், டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள  974 அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியின் இடைவேளை வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

61 ஆவது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் கிலியன் ம்பாப்பே கோல் புகுத்தினார்.

 

68 ஆவது நிமிடத்தில் டென்மார்க் வீரர் அண்ட்ரேயஸ் கிறிஸ்டென்சன் கோல் புகுத்தி, கோல் விகிதத்தை சமப்படுத்தினார்.

எனினும், 86 ஆவது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் கிலியன் ம்பாப்பே மீண்டும் கோல் அடித்து பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஏற்கெனவே அவுஸ்திரேலியாவை 4:1 கோல்களால்  பிரான்ஸ் வென்றிருந்தது. இன்றைய போட்டியில் டென்மார்க் அணியுடனான பெற்ற வெற்றி மூலம் மொத்தமாக  6 புள்ளிகளைப் பெற்ற  பிரான்ஸ் , 16 அணிகள் கொண்ட 2 ஆவது சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.