- ஈழத்தமிழர், ரோகின்யா முஸ்லிம்கள் உள்ளிட்ட உலகில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளில், மேற்குலக நாடுகள் கையாண்ட தவறான அணுகுமுறைகளே, உலகில் இன்று எழுந்துள்ள அரசியல், பொருளாதார இராஜதந்திர நெருக்கடிகளுக்கான பிரதான காரணமென்ற அவதானிப்புகளும் உண்டு0 அ.நிக்ஸன்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் சென்ற 11ஆம் திகதி புதன்கிழமை கூறியுள்ள நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான உள்ளிட்ட அதிகாரிகளைச் சென்ற ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் சந்திப்பு இரகசியமாகவே நடந்ததென்றும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடைய இன்னமும் 65 நாட்கள் உள்ளன. ஆனாலும் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள் ஈரன் மீது தாக்குதல் நடத்த டொனால்ட் ட்ரம்ப் முற்படுகிறார் என்றே சவுதி அரேபியச் சந்திப்பை நோக்க வேண்டியதாகவுள்ளது.
ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் அமெரிக்காவில் பதவியேற்பதற்கு முன்னர் ஈரான் மீதான தாக்குதலை நடத்தித் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அதிசயங்களைக் காண்பிக்கக் கூடுமென அவதானிகளும் சந்தேகிக்கின்றனர்.
அதற்குக் கட்டியம் கூறும் வகையிலேயே ஈரான் நாட்டின் அணுவாயுத் திட்டங்களின் பிரதான சூத்திரதாரி என மேற்குலக நாடுகளினால் நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டு வந்த மொஹ்சென் பக்ரிசாதே என்ற அணுவிஞ்ஞானி நேற்றுச் சனிக்கிழமை கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் இந்த படுகொலைக்கு காரணம் என்பதற்கான உறுதியான ஆதாரஙகள் இருப்பதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஜாவட் ஜரீவ் தனது டுவிட்டரில் பதிவில் கூறியுள்ளார். ஆகவே இந்தத் தாக்குதல் ஈரானைப் போருக்குத் தூண்டுவதாகவே அமைந்துள்ளதெனலாம்.
அமெரிக்கா மீது கடும் அதிருப்தியடைந்துள்ள ஈரான் ஜனாதிபதி அலி கமேனி, கடந்த நான்கு ஆண்டுகளில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விட்ட தவறுகளை ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் திருத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுள்ளார். இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, சவுதி அரேபியாவில் இஸ்ரேலியப் பிரதமருடனான சந்திப்பு நடத்தப்பட்டதுடன், ஈரான் அணுவிஞ்ஞானியும் சனிக்கிழமை கொல்லப்பட்டிருக்கிறார்.
சவுதி அரேபியச் சந்திப்புத் தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதனையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் சவுதி அரேபியாவும் வெளியிடவில்லை.
ஆனால் இஸ்ரேலுடனான உறவைச் சீராக்க, அரபு நாடுகளை சமாதானப்படுத்த அமெரிக்காவின் ஆலோசனையோடு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசியதாகவும், இந்தச் சந்திப்பு இஸ்ரேல், சவுதி அரேபிய நாடுகளுக்கிடையிலான முதலாவது சந்திப்பு என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் நியோமில் நடைபெற்றதாகக் கூறப்படும் சந்திப்பில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட்டின் தலைவர் யோசி கோஹனும் கலந்து கொண்டதாக இஸ்ரேலின் கான் பொது வானொலி மற்றும் இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.
இந்தவொரு நிலையில் ஈரான் அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டமை அமொிக்க இஸ்ரேல் கூட்டுச் சதியென ஈரான் அரசு குற்றம் சுமத்தியதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இது டொனால்ட் ட்ரமப்பின் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று கருதி ஈரான் அமைதியாக இருக்கவும் வாய்ப்புண்டு.
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, ரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து ஐ. நா பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளும் மற்றும் ஜேர்மனியையும் உள்ளடக்கிய P-5+1 வல்லரசு நாட்டுக் குழுவுடன் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக 2015-ம் ஆண்டு Joint Comprehensive Plan of Action (JCPOA) எனும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. இது ஒபாமா நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்றாகவும் காட்டப்பட்டுவந்தது.
இந்த ஒப்ப்ந்தத்தை இஸ்ரேல். சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் கடுமையாக எதிர்த்ததால், பராக் ஒபாமாவின் பின்னர் 2017இல் ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்துவிட்டார். அத்துடன் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்தது.
ஆனாலும் அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில், ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அளவை விட 12 மடங்கு அதிக அளவில் (202.8 கிலோவிற்கு பதிலாக 2.4 டன்கள்) ஈரான் தற்போது செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் அரசு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கடந்த 12ஆம் திகதி அறிவித்திருந்தது. இதனையடுத்தே கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையில் பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் அவசரமாகக் கூடி ஆராய்ந்தனர்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை இலக்கு வைத்து ராணுவ தாக்குதல் ஒன்றை நடத்த டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளிதல் செய்தி வெளியிட்டிருந்தது. துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவருமே ஈரான் மீது தாக்குதல் நடத்த விரும்பியிருக்கவில்லை. தாக்குதல் நடத்த வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்துக்கு மாறாகவே அந்த அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்தாக நியோர்க் ரைம்ஸ் கூறியிருந்தது.
ஈரான் அணு ஆயுத மையங்கள் மீதான தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளையடுத்து தாக்குதல் நடத்த வேண்டுமென்ற தனது முடிவில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியதாகவும் நியோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தவொரு நிலையிலேயே பொம்பியோ இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் சவுதி அரேபியாவுக்குச் சென்று இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்து உரையாடியிருக்கின்றனர். இந்த சந்திப்பு ஈரான் மீதான தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் ஆதரவைக் கோருவதோடு இஸ்ரேல் அரசின் ஆதரவையும் வெளியிடும் நோக்கில் நடத்தப்பட்டதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.
ஆக, தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஈரான் மீதான போர்ச் சூழல் ஒன்றை உருவாக்கிவிட்டால், ஜோ பைடன் பதவியேற்றாலும் ஒபாமா காலத்து அமெரிக்க நிர்வாகம் ஒன்றை மீண்டும் மீளுருவாக்கம் செய்ய முடியாதென ட்ரம் சிந்திக்கக்கூடும். இதன் பின்னணியிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டதையும் அவதானிக்க முடியும்.
ஈரான் மீதான தாக்குதலை விரும்பாத மற்றும் சில நடவடிக்கை யோசனைகளுக்கு ஒத்துழைக்காத அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பரை அந்தப் பதவியில் இருந்து நீக்கிய டொனால்ட் ட்ரம், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் கிற்ஸ்டோபர் மில்லரை அந்தப் பதவிக்கு நியமித்துமிருந்தார்.
1967-ம் ஆண்டு அரபு இஸ்ரேல் போரின்போது இஸ்ரேல் சிரியாவிடமிருந்த அபகரித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோலான் குன்றுகள் இஸ்ரேலின் ஒரு பகுதியென டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா அங்கீகரித்திருந்தது. அத்துடன் பலஸ்த்தீனியர்களின் மேற்குக் கரைப்பிரதேசத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட சட்டவிரோதமான யூதக் குடியேற்றங்களையும் அமெரிக்கா அங்கீகரித்தது. ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகளோடு இஸ்ரேல் இராஜதந்திர உறவுகளைப் பேண டொனால் ட்ரம்ப் ஏற்பாடும் செய்திருந்தார்.
இந்த ஆண்டு யூன் மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, கொல்லப்பட்டார். இது இஸரேலுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்றே அப்போது அவதானிகள் கூறியுமிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் தனது பதவிக்காலத்தைத் தொடர்ந்தும் தக்க வைக்கலாமென்ற நோககில், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்படுவதாகக் கருத இடமுண்டு. டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட முறையிலான இந்த நகர்வுகள் ஒட்டுமொத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கும் ஒத்துழைத்துச் செயற்படும் ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கும் சவாலாக அமைவதோடு, அந்த நாடுகளின் சுயமரியாதைக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒன்றாகவே நோக்கலாம்.
ஆனால் ஈழத்தமிழர், ரோகின்யா முஸ்லிம்கள் உள்ளிட்ட உலகில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் கையாண்ட தவறான அணுகுமுறைகளே, உலகில் இன்று எழுந்துள்ள அரசியல், பொருளாதார ரீதியான இராஜதந்திர நெருக்கடிகளுக்கான பிரதான காரணமென்ற அவதானிப்புகளும் உண்டு. இது பற்றிய விடயங்கள் இப் பத்தியில் ஏலவே எழுதப்பட்டிருக்கிறது.