காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்துவந்த 60 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரை கொரோனா நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு அரைவாசியாகக் குறைந்ததாலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது இறப்புத் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையை செய்வதா? அல்லது பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனையைச் செய்வதா? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.
குறித்த முதியவர் ஒரு மாற்றுத்த திறனாளி. இவர் நேற்றைய தினம் மூச்சுத் திணறல் காரணமாக காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். எனினும் அவரிற்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி சிகிச்சை வழங்காது திருப்பி அனுப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.