ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி.

ஜனாசா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

உலக சுகாதார ஸ்தாபனம் கூறும் விடயங்களை நடைமுறைப்படுத்துகின்ற அரசு ஏன் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் மட்டும் அவர்களின் வழிகாட்டல்களை பின்பற்றாமல் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி எரிக்க வேண்டும் என கூறும் அரசு ஏன் மினுவான்கொடையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் நாட்டை முடக்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் கூறியபோது அதை கேட்கவில்லை.

இன்று ஜனாசா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாவை அடக்க அனுமதி தாருங்கள் என்றே கோருகின்றார்களே தவிர அதை மன்னாரிலா யாழ்பாணத்திலா அ ம்பாந்தோட்டையிலா அடக்கம் செய்வது எனக் கேட்கவில்லை. எனவே இதை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உள்ள புரிந்துணர்வை குழப்ப வேண்டாம் என்றார்.